×

தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு: ஏபிவிபியின் முன்னாள் தலைவர் டாக்டர் சுப்பையா பணியிடை நீக்கம்!!

சென்னை: தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி கைதான பாஜக மாணவ அமைப்பான ஏபிவிபி அமைப்பினரை சிறையில் சென்று சந்தித்த கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர் சுப்பையா அரசு ஊழியருக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சை மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த ஏபிவிபி அமைப்பின் போராட்டத்திற்கு முன்னாள் தலைவரான மருத்துவர் சுப்பையா ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஏபிவிபியின் முன்னாள் தலைவர் மருத்துவர் சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசு ஊழியருக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறியதாக அளிக்கப்பட்ட புகாரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் மீதான புகாரில் விசாரணை நடைபெற்று மறு அறிவிப்பு வரும் வரை பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மருத்துவர் சுப்பையா சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் தலைவராக பணியாற்றி வருகிறார்.

அரசு பணியில் இருந்து கொண்டு முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் செய்தவர்களுக்கு இவர் உதவியது தெரியவந்துள்ளது. மருத்துவர் சுப்பையா, 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பெண்ணுடன் ஏற்பட்ட தகராறில், அவரது வீட்டின் முன்பு சிறுநீர் கழித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அவர் மீது மருத்துவ கல்வி இயக்குநரகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முன்னதாக போராட்டத்தின்போது, மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டுமென கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில் முதலமைச்சர் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். இதில் 3 பேர் மைனர் என்பதால் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 29 பேரையும் பிப்ரவரி 28வரை காவலில் வைக்க சென்னை 18வது பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இவர்கள் முன் ஜாமின் கோரி வழக்கும் தொடர்ந்துள்ளனர்.


Tags : APVB ,Suppaya , Tanjore, student, suicide, case, ABVP, doctor, Subbaiah, dismissal
× RELATED சென்னை கீழ்பாக்கம் அரசு...