×

வெ.இண்டீசுக்கு எதிரான முதல் டி.20 போட்டியில் அபார வெற்றி; ரவிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது: கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு

கொல்கத்தா: இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டி கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டி நேற்று இரவு கொல்கத்தாவில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன் எடுத்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 61 (43 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) ரன் எடுத்தார். கைல் மேயர்ஸ் 31, கேப்டன் பொல்லார்ட் நாட்அவுட்டாக 24 ரன் அடித்தனர். இந்திய பந்துவீச்சில், அறிமுக வீரர் ரவி பிஷ்னோய், ஹர்சல் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 158 ரன் இலக்கை துரத்திய இந்திய அணியில், கேப்டன் ரோகித்சர்மா 40 (19 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), இஷான் கிஷன் 35, விராட் கோஹ்லி 17, ரிஷப் பன்ட் 8 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

ஆட்டம் இழக்காமல் சூர்யகுமார் யாதவ் 34 (18 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), வெங்கடேஷ் ஐயர் 24 (13 பந்து) ரன் அடிக்க 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன் எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 ஓவரில் 17 ரன் கொடுத்து 2 விக்கெட் எடுத்த ரபி பிஷ்னோய் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்க 2வது போட்டி நாளை நடக்கிறது. வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது: கொஞ்சம் சீக்கிரம் ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும். நாங்கள் நடுவில் சில விஷயங்களைச் செய்ய முயற்சிக்கிறோம், அது பலனளிக்கவில்லை, ஆனால் வெற்றியில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த ஆட்டத்தில் இருந்து எங்களால் அதிக நம்பிக்கையைப் பெற முடியும்.

ஒரு சிறந்த பேட்டிங் யூனிட்டை (வெ.இண்டீஸ்) 157 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது பந்து வீச்சாளர்களின் பெரும் முயற்சி. பிஷ்னோய் மிகவும் திறமையானவர் அதனால் தான் அவரை உடனடியாக அணியில் சேர்த்தோம். அவரிடம் வித்தியாசமான ஒன்றைக் காண்கிறோம். அவரிடம் நிறைய மாறுபாடுகள் மற்றும் திறமைகள் உள்ளன. அவர் எந்த நிலையிலும் பந்துவீச முடியும்.
இந்தியாவுக்காக முதல் ஆட்டத்தில் விளையாடிய அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார், அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அவரை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது இப்போது நம்மைப் பற்றியது.

ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற ஒருவர் வெளியே அமர்ந்து இருக்கிறார். அவர் விளையாடாதது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் நடுவில் பந்துவீச ஒருவர் தேவைப்பட்டார், அதனால்தான் அவரை உள்ளே சேர்க்க முடியவில்லை. வீரர்கள் அனைவரும் பார்மில் இருக்கையில், லெவன் அணியை உருவாக்குவது மிகவும் சவாலானதாக இருக்கும். ஆனால் வீரர்கள் இல்லாததை விட அந்த சவாலில் நான் மகிழ்ச்சியடைகிறேன், என்றார்.

வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் கூறுகையில், 6-15 ஓவர்களுக்கு இடையில் நாங்கள் 9 ஓவர்களில் 46 ரன் மட்டுமே எடுத்தோம், அந்தக் கட்டத்தில் இன்னும் 18-20 ரன்கள் எடுத்திருந்தால் கடும் சவாலாக இருந்திருக்கும். இருப்பினும் எங்கள் பவுலர்கள் 19வது ஓவர் வரை ஆட்டத்தை கொண்டு சென்றனர், என்றார்.

கனவு நனவானது பிஷ்னோய் ஹேப்பி
அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது பெற்ற ரவி பிஷ்னோய் கூறுகையில், ``இந்தியாவுக்காக விளையாடுவது ஒரு கனவு. அது நன்றாக இருந்தது. நான் ஆரம்பத்தில் பதட்டமாக இருந்தேன். வெ.இண்டீஸ் டி20 கிரிக்கெட்டில் வலுவான அணிகளில் ஒன்று என்பதை அறிவதால் அணிக்கு பங்களிக்க விரும்பினேன். பனி இருக்கும்போது பந்தை பிடிப்பது சற்று சவாலானது. எனது முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் விருதை பெறுவேன் என்று நினைக்கவில்லை. அதுவும் ஒரு கனவுதான்... நனவாகிவிட்டது’’ என்றார்.

பிட்ஸ்...பிட்ஸ்....
* 2009-17வரை வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 8 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, 2018 முதல் நேற்று வரை ஆடிய 10 போட்டியில் 9ல் வென்றுள்ளது.
* டி.20 போட்டியில் அணிக்காக அதிக முறை அதிக ஸ்கோர் அடித்தவர்கள் பட்டியலில் ரோகித்சர்மா (31முறை) முதல் இடத்தில் உள்ளார். கோஹ்லி 29, மார்ட்டின் குப்டில் 28 என அடுத்த 2 இடத்தில் உள்ளனர்.

Tags : T20 ,West ,Indies ,Ravi ,Rohit Sharma , Ravi, bright, future, Rohit Sharma
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது