×

மயிலாடும்பாறை-மல்லபுரம் மலைச்சாலையை சீரமைத்து தடுப்புசுவர் கட்ட கோரிக்கை

வருசநாடு: தேனி-மதுரை ஆகிய இரு மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய சாலையாக மயிலாடும்பாறை-மல்லபுரம் மலைச்சாலை உள்ளது. இச்சாலை போக்குவரத்து அதிகமுள்ள சாலையாக உள்ளது. இப்பகுதியில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மல்லப்புரம் பகுதிகளுக்கு அதிகளவில் சென்று வருகின்றனர். மேலும், வாகனங்கள் செல்லும்பொழுது இடதுபுறம், வலதுபுறம் மலைகளின் சாலையில் ஆங்காங்கே சறுக்கு ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலைக்கு செல்கிறது, சிலவேளைகளில் வாகனங்கள் தடுமாறி விபத்து ஏற்பட்டிருக்கிறது.

மேலும் மயிலாடும்பாறை பகுதிகளில் விளைகின்ற விவசாய விளை பொருட்களான தக்காளி ,அவரை, பீன்ஸ் ,கொத்தவரை, பூசணி போன்ற காய்கறிகளை உசிலம்பட்டி, பேரையூர், சிவகங்கை, திருநெல்வேலி ,மதுரை போன்ற பகுதிகளுக்கு மல்லப்புரம் மலைச் சாலை வழியாக கொண்டு செல்கின்றனர். இச்சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால் விவசாய பொருட்களை குறிப்பிட்ட நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக வருசநாடு பகுதி மக்கள் வனத்துறை சார்பாக மல்லப்புரம் சாலையை சீரமைக்க கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து வருசநாடு பகுதியைச் சேர்ந்த விவசாயி குணசேகரன் கூறுகையில், ‘எங்கள் வருசநாடு பகுதியில் இருந்து ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பேரையூர், மல்லப்புரம் பகுதிகளுக்கு செல்கின்றன. இந்த பகுதி மலைச்சாலைகள் மிகவும் மோசமாக இருக்கிறது. ஆங்காங்கே தடுப்புச்சுவர் இல்லாமல் இருப்பதால், விபத்துகள் நடப்பது வாடிக்கையாக உள்ளது..எனவே, மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றார்.

தார்ச்சாலை அமைக்க வேண்டுகோள்
வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட பசுமலைத்தேரி முதல் பொன்னன்படுகை கிராமம் வரை உள்ள மலைச்சாலை மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றர். இந்நிலையில் ஆண்டிபட்டி, தேனி, உசிலம்பட்டி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு கத்தரி, பீன்ஸ், அவரை, கொட்டை முந்திரி, எலுமிச்சை, இலவம்பஞ்சு, பப்பாளி தேங்காய் உள்ளிட்ட விவசாய விளை பொருட்களை மாட்டுவண்டி மற்றும் டிராக்டர்களில் கொண்டு செல்ல அதிக செலவாகிறது. எனவே மாவட்டம் நிர்வாகம் இப்பகுதியில் தார்ச்சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mayiladuthurai-Mallapuram hill road , Mountain road, barrier wall construction request, alignment
× RELATED மயிலாடும்பாறை -மல்லபுரம் மலைச்சாலையை...