ராகுல் காந்தி பற்றி தரக்குறைவு பேச்சு :அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு!!

ஐதராபாத்: அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மாவுக்கு எதிராக ஜூபிளி ஹில்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உரி நகரில் எல்லைப்பாதுகாப்பு படைவீரர்களின் முகாம் மீது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 18 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து பதிலடி கொடுக்கும் வகையில், எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே செப்டம்பர் 28ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கும் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவம் குண்டு வீசி  துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இந்த நடவடிக்கை சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்று அழைக்கப்பட்டது.

காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் சர்ஜிக்கல் தாக்குதல் குறித்த ஆதாரங்களை வெளியிடுமாறு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்களை கேட்டது குறித்து விமர்சித்து கருத்து கூறியிருந்தார். பாஜ வேட்பாளர்களை ஆதரித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரகாண்டில் சமீபத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‘பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா? இல்லையா? என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டோமா?’ என்று பேசினார்.

இந்தநிலையில், சர்ச்சை கருத்து கூறிய சர்மாவுக்கு எதிராக தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி எம்.பி. ஐதராபாத் ஜுபிளி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், அரசியல் ஆதாயத்துக்காக ராகுல்காந்தி பற்றி சர்மா ஆபாசமாக பேசியதாக அவர் கூறியிருந்தார். அதன் அடிப்படையில், ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு எதிராக ஜூபிளி ஹில்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்ட ஆலோசனை பெற்று இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: