×

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

காஞ்சிபுரம்: பிரபல ரவுடி படப்பை குணா மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் என்கின்ற குணா. தொடர்ந்து கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்த குணா ஒருகட்டத்தில் ரவுடி என்ற பட்டத்துடன் சுற்றிவந்துள்ளார். படப்பை குணா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வந்த ரவுடி குணா காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, தொழிற்சாலைகள்,  நிறுவனங்களை மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இதனால் போலீசார் படப்பை குணாவை தேடி வந்தனர்.  ரவுடி குணா மீது எட்டு கொலை வழக்குகள் உட்பட 47 வழக்குகள் நிலுவையில் உள்ளது. நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்ட படப்பை குணா ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், நில அபகரிப்பு புகாரில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆண்டு சென்னை பூந்தமல்லி சிறையில் உள்ள நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பூந்தமல்லி கிளை சிறையில் இருந்த படப்பை குணா, கடந்த ஆண்டு 110 விதியின் கீழ் ஓராண்டு நன்னடத்தை சான்றிதழ் கொடுக்கப்பட்ட நிலையில் அதை மீறியதாக வருவாய்துறை கோட்டாட்சியரிடம் விசாரணையானது நடைபெற்றது.

அந்த 3 நாள் விசாரணையில் 110 விதியை மீறியதாகவும், அதனால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அவர்கள், படப்பை குணா மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பாளர் அவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார். படப்பை குணா தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், பல்வேறு தொழிற்சாலைகளில் உள்ள அதிகாரிகளை மிரட்டி டெண்டர்களை கையகப்படுத்தியதாகவும் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  அவரிடமிருந்து பல டெண்டர்களை ஒழுங்கு முறைப்படுத்தி திரும்ப பெறப்பட்டது. மேலும், பல்வேறு வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அவனுடைய கூட்டாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். தற்போது படப்பை குணாவை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.     


Tags : Guna , Crime, Prosecution, Communication, Famous Rowdy, Padappai Guna, Thug Law
× RELATED தூக்குபோட்டு பெண் சாவு