×

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வருக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

சென்னை: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதல்வருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:கூடங்குளத்தில் தற்போது செயல்பட்டு வரும் இரண்டு அணு அலகுகளிலிருந்து  உருவாகும் அணுக் கழிவுகள் அணு உலைக்கு கீழேயே சேமிக்கப்பட்டு வருகின்ற  நிலையில், இந்த அணு உலைகளில் இருந்து உற்பத்தியாகும் கழிவுகளை உலைக்கு  வெளியே சேமித்து வைப்பதற்கான மையத்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட  போது இதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அந்த திட்டம்  கைவிடப்பட்டது. தற்போது, அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே அணுக்கழிவுகளை  சேமித்து வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை  வாரியம் அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், மூன்றாவது மற்றும் நான்காவது அணு அலகுகள் நடைமுறைக்கு  வந்தபிறகு அதிலிருந்து வெளியேறும் அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே சேமித்து  வைப்பதற்கான  மையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி விளம்பரம் இணையதளம்  வழியாக இந்திய அணுசக்தி கழகத்தால் வெளியிடப்பட்டு அதற்கான  ஒப்பந்தப்புள்ளிகள் வரும் 24ம் தேதி அன்று திறக்கப்பட உள்ளன. இது மிகுந்த  கவலை அளிக்கக்கூடியது என்பது மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களை மிகுந்த  பாதிப்புக்கு உள்ளாக்கும் செயலாகும்.
இதுபோன்ற  மையம் அமைக்கப்படுமேயானால், வெளி மாநிலங்களில் உள்ள அணுமின் கழிவுகளைக்  கூட இங்கு சேமிக்கும் நிலை வரக்கூடும். இது மிகவும் ஆபத்தானது. இதனை  ஆரம்பக் கட்டத்திலேயே எதிர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்நாடு  அரசுக்கு உண்டு. அணுக்கழிவுகளை சேமிப்பதற்கான மையத்தையோ  அல்லது ஆழ்நில அணுக்கழிவு மையத்தையோ தமிழ்நாட்டிற்கு வெளியில் அமைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

மக்களுக்காக திட்டங்களே தவிர,  திட்டங்களுக்காக மக்கள் அல்ல. எனவே, இந்திய அணுசக்திக் கழகம் மையத்தை  கூடங்குளத்தில் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை கோரி இருப்பதையும்,  கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே அணுக்கழிவுகளை சேமித்து  வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கான அனுமதியை இந்திய அணுசக்தி  ஒழுங்குமுறை வாரியம் வழங்கியிருப்பதையும் கருத்தில் கொண்டு Away From  Reactor மையம் கூடங்குளத்தில் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்த தேவையான  நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Koodankulam , Stop setting up access center at Koodankulam: O.P.S. Emphasis
× RELATED கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்...