×

செல்போன் பார்த்ததை கண்டித்ததால் ஆத்திரம் வகுப்பறையில் ஆசிரியருக்கு கத்திக்குத்து: காரைக்குடி அரசு ஐ.டி.ஐ மாணவன் கைது

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் அரசு ஐடிஐ செயல்படுகிறது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இயந்திரவியல் பிரிவில் ஓவிய ஆசிரியராக அரியக்குடியை சேர்ந்த ராஜா ஆனந்த் (48) பணியாற்றி வருகிறார். கடந்த 8ம் தேதி ஓவிய வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, 18 வயது மாணவன் ஒருவன் வகுப்பறையில் செல்போன் பார்த்து கொண்டு இருந்துள்ளான். இதனை கண்ட ஆசிரியர் ராஜா ஆனந்த், அவனை கண்டித்ததுடன் செல்போனை பறித்துள்ளார். ஆத்திரமடைந்த மாணவன், ஆசிரியருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஆசிரியர், ஐடிஐ முதல்வரிடம் புகார் தெரிவிக்க, மாணவனின் பெற்றோரை அழைத்து இது குறித்து தெரிவித்து கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், ஆசிரியர் ராஜா ஆனந்த் நேற்று வகுப்பறையில் அமர்ந்து இருந்தபோது திடீரென உள்ளே நுழைந்த அம்மாணவன், மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை 5 இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடினார். ராஜா ஆனந்தின் அலறல் கேட்டு சக ஆசிரியர்கள், மாணவர்கள், அந்த மாணவனை விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்த ஆசிரியர் ராஜா ஆனந்த் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



Tags : Karaikudi government ,ITI , Anger at being condemned for what he saw on the cell phone Screaming at the teacher in the classroom: Karaikudi Government ITI student arrested
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...