பண்ருட்டி அருகே ₹5 கோடி ஏலச்சீட்டு மோசடி அக்கா, தங்கை அதிரடி கைது

பண்ருட்டி: பண்ருட்டி அருகே திருவதிகையை சேர்ந்தவர் மாரிமுத்து (40). இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் பண்ருட்டி, சித்திரைச்சாவடி, கண்டரக்கோட்டை, கரும்பூர், பண்டரக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பலர் லட்சக்கணக்கில் ஏலச்சீட்டில் பணம் கட்டி வந்தனர். கடந்த 2021ல் மாரிமுத்து திடீரென இறந்துவிட்டார். இதனை அறிந்த வாடிக்கையாளர்கள் பலர், அவரது மனைவியிடம் தாங்கள் கட்டிய பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளனர். இதற்கு அவரது மனைவி தமிழ்செல்வி சரியான பதில் அளிக்கவில்லை.  

இந்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதில் சுமார் ரூ.5 கோடிக்கு மேல் ஏலச்சீட்டு பணம் கட்டி பாதிப்பு அடைந்துள்ளோம் என்று கூறியுள்ளார்கள். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்த நிலையில் திடீரென தமிழ்செல்வி குழந்தையுடன் வெளியூருக்கு தப்பி சென்றார். உடந்தையாக இருந்த அவரது தங்கை ஹேமாவதியும் மாயமானார். சென்னை ஈக்காட்டுதாங்கல் பகுதியில் பதுங்கி இருந்த தமிழ்செல்வி (32), ஹேமாவதி (27) ஆகிய இருவரையும் போலீசார்  கைது செய்தனர்.

Related Stories: