×

ஆவடி டேங்க் பேக்டரியில் வேலை வாங்கி தருவதாக கூறி 130 பேரிடம் மோசடி செய்த 2 இன்ஜினியர்கள் உள்பட 4 பேர் கைது

சென்னை: ஆவடி டேங்க் பேக்டரி ரோட்டில் எஸ்.பி.ஐ வங்கி உள்ளது. இங்கு கடந்த 14ந்தேதி ஒரு வாலிபர் ஆவடி டேங்க் பேக்டரி (எச்.வி.எப்) இணை பொது மேலாளர் எனக் கூறிக்கொண்டு ஐடி கார்டு, அலுவலக முத்திரைகளை வைத்திருப்பதாக ஆவடி டேங்க் பேக்டரி அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதனை அடுத்து, பாலசுப்பிரமணி தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் அந்த வாலிபரை பிடித்தனர்.
 விசாரணையில், அவர் வைத்திருந்த ஐ.டி கார்டு , அலுவலக முத்திரைகளை சோதனை செய்தனர். அப்போது அவை அனைத்தும் போலி என தெரியவந்தது. அதிகாரிகள் வாலிபரை பிடித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து, அதிகாரி பாலசுப்ரமணியன் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.  ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி,  இன்ஸ்பெக்டர் ராஜிவ் பிரின்ஸ் ஆரோன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில்,  அந்த வாலிபர் சென்னை அடுத்த மாங்காடு, கோவிந்தராஜ் நகர், சித்தர் கோவில் தெருவை சார்ந்த ஸ்ரீராமன் (30) என்பதும், இவர் பி.டெக் பட்டதாரி என்பதும் தெரியவந்தது. மேலும், இவரிடமிருந்து ஆவடி டேங்க் பேக்டரி போலி ஐ.டி கார்டு, அலுவலக முத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் அவரிடம் தொடர்ந்தனர்.

ஆவடி டேங்க் பேக்டரி ஜூனியர் ஒர்க்ஸ் மேனேஜர், அசிஸ்டன்ட் ஒர்க்ஸ் மேனேஜர், ஜாயின்ட் ஜெனரல் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளுக்கு முறையே ரூ.25ஆயிரம், ரூ.50ஆயிரம், ரூ.1லட்சம் என கூறி சுமார் 130க்கும் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் அவர்களுக்கு தெரிந்த நபர்களிடம் வேலைக்கு போலியான பணி நியமன ஆணையை தயார் செய்து உள்ளனர்.  மேலும், ஆவடி டேங்க் பேக்டரி போலி முத்திரையை தயார் செய்து போலியாக கையெழுத்து வழங்கி உள்ளது தெரியவந்தது.

இந்த சதி திட்டத்திற்கு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுக்கா, தபால்மேடு கிராமத்தைச் சேர்ந்த  தினேஷ்குமார் (30), இன்ஜினியர் செங்கல்பட்டு, பெரிய மலையனூர், மாதா கோவில் தெருவைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரி கிறிஸ்டோபர் (33),  சென்னை, அனகாபுத்தூர், கலைவாணர் தெருவைச் சார்ந்த விளையாட்டு பயிற்சியாளர் கார்த்திக் (32) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதில், தினேஷ்குமார் கடந்த 2018ம் ஆண்டு படைத்துறை உடை தொழிற்சாலையில் (ஓ.சி.எப்) ஸ்டெனோகிராபர் பதவிக்காக நேர்முகத்தேர்வு சென்று விட்டு வந்தார்.

அப்போது, முன்பின் தெரியாத நபர் அறிமுகமாகி, மேற்படி பணிக்காக ரூ.4 லட்சம் வரை கொடுத்து பணிநியமன ஆணை பெற்றுள்ளார். அதனை சரி பார்த்த போது போலி என தெரியவந்துள்ளது. இதனால், தினேஷ்குமார் தான் ஏமாந்த வழியிலேயே மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கலாம் என முடிவு செய்து உள்ளார். இதனையடுத்து அவர் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து 130க்கும்  மேற்பட்டோரிடம் சுமார் ரூ.50லட்சம் வரை மோசடியாக பெற்று ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அவர்களை அணுகி நபர்களை முதல்கட்டமாக உடல் திறனாய்வு தேர்வு என்று கூறி திருமுல்லைவாயலில் உள்ள தனியார் பாலிடெக்னிக் விளையாட்டு மைதானத்தை வாடகைக்கு எடுத்து நடத்தியும், அங்கேயே நேர்முகத் தேர்வை நடத்தியும் பணி ஆணை கொடுப்பதற்கான கால தாமதம் ஏற்பட்டதாக கூறி வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து போலீசார் ஸ்ரீராமன், தினேஷ்குமார், கிறிஸ்டோபர், கார்த்திக் ஆகிய 4 பேரையும் நேற்று  கைது செய்தனர். பின்னர் அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Avadi Tank Factory , Four arrested, including two engineers, for allegedly defrauding 130 people of a job at the Avadi Tank Factory
× RELATED ஆவடி அருகே 600 போதை மாத்திரை, 4 கிலோ கஞ்சா பறிமுதல்