எடப்பாடி பழனிசாமி சில மாதங்களில் சிறைக்கு செல்வது உறுதி: ஆத்தூர் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஆத்தூர்: எடப்பாடி பழனிசாமியும், அவரது நண்பர் இளங்கோவனும் இன்னும் சில மாதங்களில் சிறைக்கு செல்வது உறுதி என்று சேலம் மாவட்டம் ஆத்தூர் பிரசார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சேலம் மாவட்டம் ஆத்தூர், நரசிங்கபுரம் நகராட்சி வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, ஆத்தூர் ராணிப்பேட்டையில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேசியதாவது: கடந்த 9 மாத கால திமுக ஆட்சியில், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். கடந்த அதிமுக ஆட்சியின் போது, அரசு கஜானாவை காலி செய்து ₹5 லட்சம் கோடி கடன் வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பதவியேற்ற திமுக அரசு, மக்களின் தேவைகளை உணர்ந்து சிறப்பாக செயல்பட்டு, இந்தியாவில் தலைசிறந்த முதல்வர் என்ற முதலிடத்தை முதல்வர் தக்க வைத்துள்ளார்.

உள்ளாட்சி நிர்வாகத்தில் ஆளும் கட்சி வெற்றி பெற்றால்தான், அரசின் செயல் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடையும். எனவே,  நீங்கள் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரிக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியின் போது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அவரது நண்பர் இளங்கோவனும், மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக தேர்வு செய்து, பணத்தை சுருட்ட வேண்டும் என்ற நோக்கில் சாலைப் பணிகளை செய்தனர். இன்னும் சில மாதங்களுக்குள், அவர்கள் இருவரும் சிறைக்கு செல்வது உறுதி. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார். கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு, எம்.பி.,க்கள் கௌதம சிகாமணி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

* தமிழகத்தின் 2 அமாவாசைகள் யார் என்று மக்களுக்கு தெரியும்

சேலம் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை  ஆதரித்து, தாதகாப்பட்டி மற்றும் கோட்டை மைதானத்தில் திமுக இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேசுகையில்,

எடப்பாடியாருக்கு  என் மீது தனிப்பாசம் உள்ளது. என்னை காணவில்லை என கடந்த 2 நாட்களாக கூறி  வருகிறார். சட்டமன்றத்தில் அவருக்கு எதிரேதான் நான் இருந்தேன். மேலும், 27  அமாவாசைக்குத்தான் திமுக அரசு இருக்கும் எனக்கூறி வருகிறார். தமிழகத்தின் 2  அமாவாசைகள் யார்? என்று  மக்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: