×

பிஸ்னஸ் ஆன் வீல்ஸ்...

நன்றி குங்குமம் தோழி

இது பெண்களுக்காக

சிலரது வெற்றியின் ரகசியம்- வித்தியாசமாய் சிந்திப்பதே… அப்படியாக அமைந்த இருவரது சிந்தனையே ‘பிஸ்னஸ் ஆன் வீல்ஸ்’ எனப்படும் ‘ஆன் வீலிங்’ பிஸினஸ். மக்கள் பயணிக்கும் விசயமாய் பார்த்த ஆட்டோவை நடமாடும் விற்பனை அங்காடியாக நாங்கள் கற்பனை செய்ததில் உருவான இந்த ஆன் வீலிங் பிஸினஸ், இந்த கோவிட் நேரத்தில் அனைவருக்கும் புரிந்தது. சமூக இடைவெளியை பயன்படுத்தி செய்யும் தொழிலாகவும் பலனளிக்கிறது எனப் பேசத் தொடங்கினர் தியாகராய நகரில் இயங்கி வரும் MAUTO நிறுவனத்தின் உரிமையாளர் மன்சூர் அலியும், அதன் சி.இ.ஒ. யாஸ்மினும். ‘‘தமிழ்நாட்டில் நாங்கள்தான் நடமாடும் வாகன விற்பனை நிலையங்களைக் கொண்டு வந்தோம். பெண்கள் வெறும் ஆட்டோ ஓட்டுநராய் ஆட்டோவை ஓட்டிக் கொண்டிருப்பதால் நிதி ஆதாரம் உயராது. சவாரி இல்லாத நேரத்திலும் அவர்களுக்கான சிறு தொழிலை ஆட்டோவிற்குள் உருவாக்க நினைத்ததன் விளைவு… பெண்களுக்கான இந்த ‘ஆன் வீலிங்’ பிஸினஸ்’’
- கட்டைவிரலை உயர்த்தி தம்ஸ் அப்

காட்டி சிரிக்கின்றனர் இருவரும் வெற்றிப் புன்னகையோடு. அதிகமான பெண் ஆட்டோ டிரைவர்களை கொண்ட நிறுவனம் எங்களுடையது.  பெண்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவருக்கு வேலை வாய்ப்பை தர வேண்டும் என, முதலில் மீட்டர் போடும் திட்டமாக ‘நம்ம ஆட்டோ’, ‘மக்கள் ஆட்டோ’ போன்ற திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் கிளச்சை அழுத்தி ஆட்டோவை இயக்க பெண்கள் சிரமப்பட்டார்கள். பெண்களை சுலபமாய் இயக்க வைக்கும் நோக்கத்தில், கிளச்சை எடுத்துவிட்டு எலெக்ட்ரிக் முறையில் இயங்கும் ஆட்டோவை உருவாக்கினோம். இரு சக்கர வாகனத்தை ஓட்டத் தெரிந்தாலே போதும் எலெக்ட்ரிக் ஆட்டோவை  சுலபமாய் கையாளலாம். நிறைய சிறு தொழில்களை பெண்கள் வீட்டிலிருந்து செய்து வருகிறார்கள். கடை போட்டால் அட்வான்ஸ், வாடகை என வருமானத்தின் முக்கால்வாசி செலவாகும்.

இதை மனதில் கொண்டு, தெரு வியாபாரிகள் எதையெல்லாம் தள்ளுவண்டியில் வைத்து தள்ளிச் சென்று மக்களிடம் சேர்க்கிறார்களோ, அவற்றை ஆட்டோவில் வைத்து விற்பனை செய்ய ஒரு மினி ஸ்டாலை ஆட்டோவின் பின் பக்கம் உருவாக்க முடிவெடுத்து, வீடு தேடி காய்கறி என்கிற சிந்தனையில், மக்கள் சந்தை கான்செப்ட்டை முதலில் கொண்டு வந்தோம். எங்களிடம் இப்போது 11 வகையான மாடல் ஆட்டோக்கள் டிசைன் செய்யப்பட்டு தயாராய் உள்ளது. இதில் காய்கறிக் கடை, பழக்கடை, மளிகைக் கடை, டீக்கடை, மினி உணவகம், ஐஸ் க்ரீம் கடை, மருந்துக் கடை, தையல் கடை, அயர்னிங் கடை என பல வடிவ ஆட்டோக்கள் தயார். மிகச் சமீபத்தில் ‘கில்லி சாய்’ கஃபி ஷாப் நிறுவனம் எங்கள் ஆலோசனையை ஏற்று, மக்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு செல்லும் நோக்கத்தில், ‘ஹாய் சொல்லு ஒரு சாய் சொல்லு’ என்ற வாசகத்துடன், நடமாடும் கஃபே ஆட்டோவை தயார் செய்து பெண்களை வைத்து டீ விற்பனையில் இறங்கினர்.

மேலும் 100 ஆட்டோக்களை தயாரிக்க எங்களிடத்தில் ஆர்டர் கொடுத்துள்ளனர். எலெக்ட்ரிக் ஆட்டோவால் சுற்றுச் சூழல் மாசு கட்டுப்படுவதோடு,
எரிபொருள் செலவும் அதிகமில்லை. பேட்ரி சார்ஜ் செய்தால் போதும். ஆட்டோ ஓடத் தயார். ஒரு நாளைக்கு 5 யூனிட்டிற்கு மேல் செலவாகாது.  இதற்கு 25 முதல் 50 மட்டுமே எரிபொருள் செலவு ஆகும். நமது வீடுகளிலேயே பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளலாம். மக்களின் வசிப்பிடங்களுக்கே சென்று பெண்கள் பொருட்களை விற்பனை செய்கின்றனர். பொலியூசன் ஃப்ரீ ஆட்டோக்களை உருவாக்கியதற்காக, தமிழக முதல்வர் சமீபத்தில் எங்களை அழைத்து பாராட்டினார். கொரோனா நோய் தொற்றில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசுடன் இணைந்து, பச்சை வண்ண கொரோனா உருவத்தில் தயாரான ஆட்டோவில், தானாக இயங்கும் இரண்டு ரோபோக்களையும் தயார் செய்து வீதிகளில் கிருமி நாசினிகளைத் தெளிக்க வைத்தோம்.

ரிமோட்டை இயக்கினால் ரோபோ ஆட்டோவில் இருந்து இறங்கி தடைசெய்யப்பட்ட பகுதிகளில் மருந்தை தெளிக்கத் தொடங்கும். இதில் மக்களுக்கு இலவச கபசுரக் குடி நீர், இலவச முகக் கவசங்கள், கை சுத்தம் செய்யும் சானிடைசர்களையும் வழங்கினோம். மினி ஆம்புலன்ஸாகவும் ஆட்டோவை ரெடி செய்து வைத்துள்ளோம். உபயோகத்தில் உள்ள பெட்ரோல்,  டீசல் ஆட்டோக்களையும் எலெக்ட்ரிக் ஆட்டோவாக மாற்றித் தரும் ரெட்ரோபிட்(retrofit) முறையும் எங்களிடம் உள்ளது. இப்போது நிறைய ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன. காய்கறி ஆட்டோக்களுக்கு நிறைய ஆர்டர் வருகிறது. 5 மினி உணவக ஆட்டோவை பாண்டிச்சேரிக்கு தயாரித்துக் கொடுத்துள்ளோம். அதேபோல் தையல் மெஷின் பொருத்திய ஆட்டோக்கள் மூன்றை தயாரித்து வழங்கியுள்ளோம். ஒரு ஆட்டோவிற்கு 3 லட்சத்தில் ஆரம்பித்து 5 லட்சம் செலவாகும். இது தொழிலுக்குத் தேவையான உள் கட்டமைப்பும் சேர்ந்தது. அதாவது மெஷினரி ஓரியன்டெட். காய்கறி விற்பனை என்றால் வெஜிடபிள் ட்ரேஸ் இன் பில்டாய் உள்ளே இருக்கும். கஃபே ஷாப் எனில் அதற்கான பொருட்கள் இணைக்கப்பட்டு இருக்கும். தொழிலுக்கென எதையும் வாங்கத் தேவையில்லை.

ஆட்டோவைப் பெற்றதுமே தொழிலைத் தொடங்கலாம். முடிந்தால் இரண்டு மூன்று ஆட்டோவை வாங்கி வாடகைக்கும் விடலாம். கூடவே தொழில் செய்யத் தேவையான எல்லா வழிகளையும் உருவாக்கித் தருகிறோம். எங்களிடம் Mauto Pride என்ற செயலியும் உள்ளது. ஓலா, ஊபர் நிறுவனங்கள் மாதிரி மொபைல் ஆப் வழியாகவும் தங்கள் தொழிலை இணைக்கலாம். இன்னும் சிறிது காலத்திற்கு ஆட்டோவை பயணிகள் பயணத்திற்கென பயன்படுத்தப் போவதில்லை. எனவே தொழில் செய்யும் இடமாக மாற்றிக் கொண்டால், வருமானம் பார்க்கலாம். சுருக்கமாய் சொன்னால் அன்றாடம் தேவைகளை மக்கள் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்க்கும், மாசற்ற (polition control) தமிழகத்தை நோக்கிய மின்சார ஆட்டோ பயணம் இது எனச் சொல்லி இருவரும் விடை பெற்றனர். காலங்கள் மாறும்போது, எதிலும் வெற்றிபெற மட்டுமல்ல, எதையும் இழந்து விடாமலிருக்கவும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்துதான் தீரவேண்டியிருக்கிறது.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!