விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக 16 பட்டதாரிகளுக்கு போலி பணி நியமன ஆணை கொடுத்து ஏமாற்றிய தம்பதி உட்பட 4 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக 16 பட்டதாரிகளிடம் பணம்  பெற்று போலி பணி நியமன ஆணைகள் வழங்கி மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆந்திரா மாநிலத்தில் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஹரிநாத் ஆனந்தன்(26) என்பவர் புகார் ஒன்று கொடுத்தார்.

அந்த புகாரில், தனது சகோதரி மேகலா என்பவருக்கு சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக பொழிச்சலூர் வெங்கடேஸ்வர நகரை சேர்ந்த கிரண்(41) மற்றும் அவரது மனைவி சங்கீதா(35) மற்றும் கோவிலம்பாக்கம் சத்யா நகரை சேர்ந்த பழனிவேலு(35), ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே உள்ள வசந்தாபுரம் கிராமத்தை சேர்ந்த சங்கீதா காந்தி(36) ஆகியோர் ரூ.3,88,950 பணத்தை பெற்றுக்கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றி விட்டனர்.

இதுபோல் பல பட்டாரிகளிடமும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், படித்து வேலை தேடி வரும் பட்டதாரிகளை குறிவைத்து கிரண், அவரது மனைவி சங்கீதா, பழனிவேலு, சங்கீதா காந்திஆகியோர் விமான நிலையம் மற்றும் மத்திய, மாநில அரசுகளில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி 16 நபர்களிடம்  ரூ.70 லட்சத்திற்கு மேல் பணம் பெற்று போலியான பணி நியமன ஆணைகளை வழங்கி மோசடி செய்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த 4 பேரையும் ஆந்திர மாநிலம் சித்தூரில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி பணி நியமன ஆணைகள் தயாரிக்க பயன்படுத்திய இயந்திரம், கணினி, பிரிண்டர், மத்திய மற்றும் மாநில அரசுகளின் போலி முத்திரைகள், சொகுசு கார் மற்றும் போலி பணி நியமன ஆணைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: