×

உக்ரைன் - ரஷ்யா இடையே மூண்டிருந்த போர் மேகங்கள் கலைகிறது!: கிரிமியாவில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதாக ரஷ்யா அறிவிப்பு.. உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு..!!

மாஸ்கோ: உக்ரைன் மீது பெரும் தாக்குதல் தொடுக்கப்படலாம் என்று அஞ்சப்பட்ட நிலையில் கிரிமியாவில் நடத்தப்பட்டு வந்த போர் பயிற்சியை முழுமையாக முடித்துக்கொள்வதாக ரஷ்யா அறிவித்திருப்பது உலக நாடுகளை நிம்மதி பெருமூச்சுவிட வைத்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் மோதலால் போர் மேகங்கள் சூழ்ந்திருந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் சண்டை தொடங்கலாம் என்று உலக நாடுகள் அஞ்சின. இந்த நிலையில் நேற்று ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கு சென்ற ஜெர்மனி பிரதமர் ஓலாஃப்ஸ், உக்ரைன் மீது தாக்குதல் தொடுக்கக்கூடாது என்று அதிபர் புதினை கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து கிருமியா பகுதியில் பெலாரஸ் நாட்டு ராணுவத்துடன் இணைந்து நடத்தப்பட்டு வந்த போர்பயிற்சியை முழுமையாக நிறுத்திக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் போர் மேகங்கள் கலையத்தொடங்கி, அமைதிக்கான சமிஞ்சைகள் தென்பட ஆரம்பித்துள்ளன. கிரிமியா நிலப்பரப்பில் இருந்து ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடான பெலாரஸ் படைகள் அனைத்தும் திரும்பப்பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் இணையக்கூடாது என்று உக்ரைனை அச்சுறுத்தி வரும் ரஷ்யா, எல்லை ஓரத்தில் ஒரு லட்சம் ராணுவ வீரர்களை குவித்துள்ளது.

இதனால் உக்ரைனுக்கு ஆதரவாக 3,000 ராணுவ துருப்புகளை அமெரிக்காவும் போலந்து அருகே நிலை நிறுத்தியிருக்கிறது. போர் பதற்றம் தொற்றியதால் உக்ரைனில் இருந்து அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகளின் குடிமக்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் தங்கள் நாடுகளுக்கு திரும்பிவிட்டன. இந்திய மாணவர்களும் உடனே நாடு திரும்புமாறு இந்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் சூழ்நிலைகள் சற்றே அமைதியாகி இருப்பதால் உக்ரைனிலேயே இந்திய மாணவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Tags : Ukraine ,Russia ,Crimea , Crimea, withdrawal of troops, Russia
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...