×

‘தரவரிசையில் டாப் 10-ல் இடம் பெற வேண்டும்’: ரஷ்ய வீராங்கனை பாவ்லியூசென்கோவா விருப்பம்

மாஸ்கோ: ஓய்வு பெறுவதற்கு முன்னர் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் தரவரிசையில்,  டாப் 10-ல் இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன் என்று ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை பாவ்லியூசென்கோவா தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் அனஸ்டாசியா பாவ்லியூசென்கோவா. கடந்த 2021 பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் பைனலுக்கு முன்னேறி ரன்னர் கோப்பையை கைப்பற்றினார். 30 வயதான இவர், தற்போது மகளிர் ஒற்றையர் தரவரிசையில் 11ம் இடத்தில் உள்ளார். காயம் காரணமாக கடந்த வாரம் நடந்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிசில் இவர் பங்கேற்கவில்லை. தற்போது தோஹா டென்னிஸ் போட்டியில் இருந்தும், காயம் காரணமாக விலகிக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.

இதுவரை தனது டென்னிஸ் கேரியரில் அவர் ஒற்றையர் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் ஒரு இடத்தை கூட பிடித்ததில்லை. இது குறித்து அவர் கூறுகையில், ‘‘டென்னிஸில் இருந்து நான் ஓய்வு பெறுவதற்குள், ஒரே ஒரு ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அது நடக்குமா என்பது தெரியவில்லை. அதே போல் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் முதல் 10 இடங்களில் ஒன்றை பிடிக்க வேண்டும் என்பதும் எனது ஆசை. இந்த ஆசை நிறைவேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடந்த 2021 பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பைனலுக்கு முன்னேறியது போல, வரும் பிரெஞ்ச் ஓபனிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். ஆஸ்திரேலியாவில் தற்போது சிறப்பு பயிற்சியாளர் ஒருவரின் கீழ் தீவிரமாக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். மனதளவிலும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

Tags : Pavluchenkova , ‘Ranking, Top 10 Rank, Pavlyuchenkova
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்:...