×

இந்தியா-மே.இ.தீவுகள் இன்று கொல்கத்தாவில் மோதல் : ‘நிலையான ஆட்டத்திறன் முக்கியம்’: கிரன் பொல்லார்ட் பேட்டி

கொல்கத்தா: ‘‘இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். இந்த டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்றால், எங்கள் அணியின் வீரர்களிடம் நிலையான ஆட்டத்திறன் இருக்க வேண்டும். அது மிகவும் முக்கியம்’’ என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் கிரன் பொல்லார்ட் கூறியுள்ளார். மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை அந்த அணி 0-3 என இழந்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு இப்போட்டி துவங்குகிறது. கிரன் பொலார்ட் தலைமையிலான மே.இ.தீவுகள் அணியின் வீரர்கள், ஒருநாள் தொடரை முற்றிலுமாக இழந்த நிலையில், டி20 தொடரை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை பயிற்சி முடிந்த பின்னர் கிரன் பொலார்ட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணி, வலிமையாக உள்ளது என்பது உண்மை. இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும் தற்போது நல்ல ஃபார்மில் உள்ளனர். இன்றைய சூழ்நிலையில் இந்திய அணியை வீழ்த்த வேண்டுமென்றால்.

எங்கள் அணியின் வீரர்களிடம் நிலைத்த ஆட்டத்திறன் இருக்க வேண்டும். அது மிகவும் முக்கியம். ஒரு போட்டியில் நன்றாக ஆடி ரன்களை எடுத்து விட்டு, அடுத்து 5 போட்டிகளில் குறைவான ரன்களுக்கு ஆட்டமிழந்தால், அதனால் அணிக்கு பயன் இருக்காது. நான் கூறுவது பவுலர்களுக்கும் பொருந்தும். பவுலர்களும் கட்டுக்கோப்பாக பந்து வீசி, ஒவ்வொரு போட்டியிலும் எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். கடந்த மாதம் இங்கிலாந்தில் எங்கள் அணியின் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றினோம். அந்த தொடரில் ஜேசன் ஹோல்டர் ஆல் ரவுண்டராக ஜொலித்தார். பேட்டர்களும் நிலைத்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர்.

அதே போல் இந்த டி20 தொடரிலும், எங்கள் வீரர்கள் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று தெரிவித்தார். இந்திய அணியில் காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் இத்தொடரில் ஆட மாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றைய போட்டிக்கான ஆடும் 11 பேர் கொண்ட அணியில் கே.எல்.ராகுலும், அக்சர் படேலும் காயம் காரணமாக ஆட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் குல்தீப் யாதவ் இன்றைய போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளார். துவக்க ஆட்டக்காரராக கேப்டன் ரோஹித் சர்மாவுடன், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது இஷான் கிஷான் களமிறங்குவார் என்றும்,  மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் என இருவரில் ஒருவர் இடம் பிடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணி, வலிமையாக உள்ளது என்பது உண்மை.

Tags : India ,May ,Islands ,Kolkata ,Kiran Pollard , India-May Island, Kolkata, conflict
× RELATED புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி