×

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணிக்கு தான் வெற்றி!: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தென்னிந்திய திருச்சபைகள் பேராயர்கள் ஆதரவு..!!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, தென்னிந்திய திருச்சபைகள் பேராயர்கள் நேரில் சந்தித்து நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  தென்னிந்திய திருச்சபைகள் பேராயர்கள் - தென்னிந்திய திருச்சபைகள் செயலாளர் திரு.சி.பெர்னான்டஸ் ரெத்தினராஜா, சி.எஸ்.ஐ. மதுரை பேராயர் ஜோசப், சி.எஸ்.ஐ. கோயம்புத்தூர் பேராயர் தீமோத்தேயு, சி.எஸ்.ஐ. சென்னை பேராயர் ஜெ. ஜார்ஜ் ஸ்டீபன், சி.எஸ்.ஐ. திருநெல்வேலி பேராயர் பர்ணபாஸ், சி.எஸ்.ஐ. வேலூர் பேராயர் சர்மா நித்தியானந்தா அருட்திரு கிறிஸ்டோபர், சென்னை பேராயர் செயலர் அருட்திரு அறிவர் மேனியல் டைட்டஸ், சி.எஸ்.ஐ. பிசப் சேப்ளின் அருட்திரு ஏனஸ், சென்னை பேராயர் அருட்திரு இம்மானுவேல் தேவகடாட்சம், சென்னை பேராயர் அருட்திரு பால் தயாநிதி, சென்னை திரு. எபி. எர்னஸ்ட், சென்னை திரு. பார்த்தீபன் செனாட், சி.என்.ஐ. பொதுச்செயலர் திரு. தயாநிதி, சி.என்.ஐ. பொருளாளர் திரு. ஹேமில்டன் வெல்சர் உள்ளிட்டோர் கழகத் தலைவர் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

தென்னிந்திய திருச்சபை பொதுச் செயலாளர்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

தென்னிந்திய திருச்சபை சார்பில் இன்று முதலமைச்சர் அவர்களை தமிழகத்திலுள்ள அனைத்து பேராயர்கள் சார்பாக நாங்கள் சந்தித்தோம். பெரும்பான்மை மக்களும், சிறுபான்மை மக்களும், இன்றைக்கு சுபிட்சமாக, மகிழ்வோடு தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை இந்த நாடே அறியும். அந்த வகையிலே கிறிஸ்துவ மக்களுக்கு என்றைக்கும் அரணாக இருக்கின்ற அமைப்பு திராவிட முன்னேற்றக் கழகம். எனவே, எங்களுடைய ஒட்டுமொத்த ஆதரவையும், எதிர்வருகின்ற உள்ளாட்சி தேர்தலிலே திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதனுடைய கூட்டணிக் கட்சிகளுக்கு எங்களுடைய ஆதரவினை தெரிவித்து, உங்களுடைய வெற்றிக்காக உழைப்போம், உழைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை முதலமைச்சர் அவர்களிடத்திலே நாங்கள் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறோம்.

நிச்சயமாக நடைபெறவிருகின்ற உள்ளாட்சித் தேர்தலிலே சமூகநீதிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்ற இந்த தமிழகம், திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலே போட்டியிடக் கூடிய அனைத்து வேட்பாளர்களும் நிறைவான வெற்றியை பெறுவார்கள் என்ற எங்களுடைய எண்ணத்தையும், ஆதரவையும் தெரிவித்திருக்கிறோம். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் எங்களுடைய எண்ணங்களை, எங்களுடைய பேச்சுகளை கூர்மையாக கவனித்து, தொடர்ந்து எங்களுடைய ஆதரவினை தெரிவிக்கின்றோம் என்பதை அவரிடத்திலே தெரிவித்த போது,  அவர்களும் மகிழ்ந்தார்கள். தமிழகத்திலே சில மாதங்களாகவே, ஒருசில நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தை மதக்கலவர பூமியாக மாற்ற நினைப்பவர்களின் சிந்தனை தமிழகத்திலே எடுபடாது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

100 ஆண்டுகளுக்கும் மேலாகவே சமூகநீதியை பற்றி விவாதித்து கொண்டிருக்கிற ஒரு மாநிலம் தான் தமிழகம். சமூகநீதியை அமல்படுத்துகின்ற மாநிலமாக தமிழகம் விளங்கி கொண்டு இருக்கிறது. முதலமைச்சர் அவர்களுடைய கடுமையான உழைப்பிலே இன்றைக்கு சமூகநீதி அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையிலே, யாரும் தமிழகத்தை மதரீதியாக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அது தமிழகத்திலே நடைபெறாது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். தென்னிந்திய திருச்சபை ஒட்டுமொத்த ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கியது. இன்றைக்கு தமிழக பேராயர்கள் தங்களது ஆதரவையும், உங்களுக்காக  உழைப்போம் என்ற உறுதியையும்  தெரிவித்திருக்கிறார்கள். 


Tags : Dimugha Coalition ,Urban Local Elections ,Md. ,KKA ,Stalin ,South Indian Churches , Election, DMK, Victory, MK Stalin, Archbishops of South Indian Churches
× RELATED காட்டுவாசியாக நடிக்கிறார் பீட்டர் ஹெய்ன்