×

ஆன்லைன் வகுப்புகள் சாத்தியமா?

நன்றி குங்குமம் தோழி

கொரோனா வைரஸ் எத்தனையோ புதுப்புது சவால்களை நம் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. அதில் ஒன்று குழந்தைகளின் கல்வி குறித்த கவலை. நாளுக்கு நாள் நோய் தொற்று பெருகிக் கொண்டே இருப்பதால், மீண்டும் எப்போது பள்ளிகள் திறக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இந்நிலையில் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் லேப்டாப் வழியே இணையவழி வகுப்புகளை பல தனியார் பள்ளிகள் நடத்தத் தொடங்கியுள்ளன. ஆன்லைன் வகுப்பிற்கு அதிவேக இணைய இணைப்பு தேவைப்படும் நிலையில் ஏழை  எளிய குடும்பங்களில் இதற்கான சாத்தியக் கூறுகள் உண்டா? பல குடும்பங்களில் பெற்றோர் வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள். இதில் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கெடுப்பது சாத்தியமா? கல்வி ஆர்வலர்களும், மனநல மருத்துவர்களும் குழந்தைகளிடம் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் லேப்டாப்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று கூறி வந்த நிலையில், பெற்றோர்களே அவற்றை குழந்தைகளிடம் வலிய திணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும்? வசதி படைத்த குழந்தைகள் படிக்கும் மிகப் பெரிய பள்ளிகளில் ஆன்லைன் கல்வி பெறுவதில் சிக்கல் இருக்காது. நடுத்தர மற்றும் ஏழை மாணவர்கள் நிலை?  ஆன்லைன் கல்வி அனைவருக்கும் சாத்தியமா? இது குறித்து பலரின் கருத்தைக் கேட்டபோது…
கிருஷ்ணவேணி, தலைமையாசிரியர் இந்த லாக்டவுன் இடைவெளியில், நான் குழந்தைகளைக் கொண்டு ஒரு வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கினேன். அதில் குழந்தைகளை பாட வைப்பது, கதை சொல்ல வைப்பது, படம் வரைய வைப்பது, நெட்டில் பார்க்கும் செய்திகளை பகிர்வதென தொடர்பில் இருந்தேன். என் வகுப்பில் பல புத்திசாலி குழந்தைகளிடத்தில் ஆன்ட்ராய்ட் மொபைல் வசதி இல்லை. பலரிடம் மொபைலே இல்லை.  20 குழந்தைகள் இருந்த இடத்தில் 8 குழந்தைகள்தான் பங்கெடுத்தனர்.

நாட்கள் செல்லச் செல்ல எட்டு நான்காக குறைந்தது. காரணம், ரீசார்ஜ் செய்வதிலும் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. அரசு இணைய வசதியை இரண்டு மூன்று மாதத்திற்காவது இலவசமாக வழங்கி இருந்தால் குழந்தைகளின் தொடர்பு ஓரளவு எங்களுக்குக் கிடைத்திருக்கும். அடிமட்டத்தில் இருக்கும் பெற்றோர்களும், கூலித் தொழிலாளிகளும் அதிகமாக இருக்கும் இடத்தில் தொடர்பியல் எத்தனை முக்கியம். பெற்றோர்கள் அன்றாட உணவுக்கான தேவையை பார்ப்பார்களா? மொபைல் ரீசார்ஜை யோசிப்பார்களா? மேலும் மாணவர்களின் சிந்தனையும் செயலுமே கற்றல்.  வகுப்பறையில் பாடம் நடத்துவது மாதிரி கரும்பலகையில் எழுதி அதை அப்படியே வீடியோ எடுத்துக் காண்பிப்பது மிகப் பெரும் அபத்தம். இதுவா ஆன்லைன் கல்வி?  ஆன்லைன் கல்வியில் மொபைலைக் கொடுத்து  அதில் ஆசிரியர் பேசிக் கொண்டே இருந்தால் குழந்தைகள் சலிப்படைவார்கள். கல்வி என்பது பாட புத்தகத்தில் இருக்கும் விசயம் மட்டுமல்ல.
 
குழந்தைகளின் உலகம் வேறு. அது கற்பனையால் நிறைந்தது. அவர்களது கவனம் வகுப்பறையில் பத்து நிமிடம்தான் இருக்கும். அதன் பிறகு அடுத்த சிந்தனைக்குள் பயணிப்பார்கள். அவர்களை தட்டி எழுப்பி பாடத்திற்குள் கொண்டுவர வேண்டும். ஒரு விளையாட்டை செய்வது மாதிரி படிப்பை குழந்தைகளிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். சிலபஸ் தாண்டி வாழ்க்கைக்கான விசயங்களையும் கொடுக்க வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர் இணைந்து யுடிஎ குழு மூலமாக சில பாடங்களை இ-கண்டென்டாக்கி அதனை QR கோடுக்குள் கொண்டு வந்துள்ளோம். இதில் சில பாடங்களை ஆடியோவாகவும், வீடியோவாகவும் பார்க்கலாம்.  இதற்கென 50 முதுல் 60 ஆசிரியர்கள் வேலை செய்கிறார்கள்.  அரசின் இணைய தளத்திலும் இதனை பதிவேற்றச் சொல்லியுள்ளனர். ஆன்ட்ராய்ட் மொபைலில் ஸ்கேன் செய்தாலே பாடம் நமது மொபைலுக்குள் வந்துவிடும்.

பாடலும் இசையுமாக குழந்தைகள் பாடத்தைக் கேட்கும்போது அவர்களின் பங்களிப்பு சிறப்பாய் உள்ளது. வீட்டில் இருக்கும் குழந்தைகளைப் படிக்க வைக்க கதை சொல்வது, கதையில் வரும் நபர்களின் பெயர்களைக்  கேட்பது, தவறாய் சொன்னால் மீண்டும் வீடியோவைப் பார்க்க வைத்து சரியான பதிலைச் சொல்ல வைப்பது என இதில் செல்லும். ஒவ்வொரு வீடியோவிலும் 5 கேள்விகளைக் கேட்டு விடை சொன்னதும் அடுத்த வீடியோவிற்குள் செல்வது மாதிரியாகத் தயார் செய்து இருக்கிறோம்.

சுடரொளி,

ஆசிரியர் மற்றும் குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பின் தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர் பத்து சதவீதத்துக்கும் குறைவான குழந்தைகளுக்கு மட்டுமே சென்றடையும் ஆன்லைன் கல்வி முறையை நாங்கள் முற்றிலுமாக மறுக்கிறோம். அரசின் திட்டமிடல் எதுவாயினும் அது அனைத்து குழந்தைகளுக்கானதாக இருக்கவேண்டும். எல்லாக் குழந்தைகளுக்கும் சென்றடையும் வழிமுறைகளை அரசு அறிவிக்காத வரை இணைய வழிக் கல்வி சாத்தியமில்லை.

மேலும் அலைபேசியை குழந்தைகள் பயன்படுத்த நேரிடும் சூழலில் பல்வேறு சிக்கல்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

* இணையதளத்தை தவறாக பயன்படுத்துதல்.

* பெற்றோரிடம் அலைபேசி இல்லாத சூழலில் வேறு நபர்களிடம் அலைபேசி உதவி வேண்டி, குழந்தைகள் தவறாக நடத்தப்படும் வாய்ப்பு. (இதில் பாலியல் தொந்தரவு, அவமானப்படுத்துதல், வேலை வாங்குதல் போன்றவை)

* அலைபேசி இல்லாத குழந்தைகளின் மனநிலை சிக்கலுக்குள்ளாகுதல். (கேரளாவில் ஒரு மாணவி அலைபேசி இல்லை என இறந்தாள்)

* உணவுக்கே சிக்கலாகும் குடும்ப நிலை புரியாமல் அலைபேசி வாங்க, இணைய இணைப்பு பெற வேண்டுமென பெற்றோருக்கு நெருக்கடி தருதல்.

* தன் குழந்தையின் படிப்பு பாழாகிவிடுமோ எனும் அச்சத்தில் கடன் வாங்கி அலைபேசி வாங்குதல், இணையதள இணைப்பு எனும் நிலைக்கு பெற்றோர் நகர்தல்.

* தனிமனித இடைவெளியைக் கருத்தில் கொள்ளாது ஒரு அலைபேசியை பலர் பயன்படுத்துதல்.

* பெற்றோர் மேற்பார்வை இன்றி குழந்தைகள் இணையதள வசதி அலைபேசியை பயன்படுத்துவதை ஆதரிக்க இயலாமை. அரசுக்கென கல்வி தொலைக்காட்சி தனியாக உள்ளது. அத்துடன் தனியார் தொலைக்காட்சிகளையும் இணைத்துக்கொண்டு, இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கலாம். அனைவர் வீட்டிலும் தொலைக்காட்சி உள்ள நிலையில், இதற்கு கேபிள் கனெக் ஷன் இருந்தாலே போதுமானது.

வேல்நெடுங்கனி,

தனியார் பள்ளி ஆசிரியர் எனது பள்ளி மத்தியதர வர்க்க குழந்தைகள் பயிலும் பள்ளி. பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர் வியாபாரிகள். படிப்பறிவு இல்லாதவர்கள். இவர்களுக்கு குழந்தைகள் இணையத்தில் என்ன செய்கிறார்கள் எனத் தெரியாது. படித்த பெற்றோராக இருந்தால் குழந்தைகளை உட்கார வைத்து சொல்லிக் கொடுக்கிறார்கள். படிக்காத பெற்றோர் என்றால் கஷ்டம். 50 குழந்தைகள் உள்ள என் வகுப்பில் 10 முதல் 15 குழந்தைகள் வீட்டில் மட்டுமே ஆன்ட்ராய்ட் மொபைல் இருந்தது. ஆனால் இப்போது 35க்கும் அதிகமான குழந்தைகள் ஆன்ட்ராய்ட் மொபைல் வாங்கி பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். நான் ப்ரைமரி வெவல் குழந்தைகளின் ஆசிரியர் என்பதால் ஆன்லைன் வகுப்பு என்பதைவிட, பாடங்களை வீடியோவாக வாட்ஸ் ஆப் செய்கிறேன்.

காலையில் 8 மணிக்கு பாடங்களை அனுப்பினால்,  அதைப் பார்த்துவிட்டு விடைகளை மாலை 5 முதல் 7 மணிக்குள் குரூப்பில் போட வேண்டும். 7 மணிக்கு மேல் சரியான விடைகளை குரூப்பில் தெரிவிப்போம். எங்கோ ஓரிடத்தில் இருந்து குழந்தைகளை பார்க்காமலே பாடம் எடுப்பதில் 50 சதவிகிதத்திற்கு குறைவான திருப்திதான் எனக்கு உள்ளது. நேரடியாய் வகுப்பெடுக்கும்போது பல உதாரணங்களைச் சொல்லி குழந்தைக்கு புரியவைக்க முடியும். குழந்தைக்கு புரியவில்லை என்பதையும் முகத்தைப் பார்த்தே எங்களால் உணர முடியும். குழந்தைகளும் வகுப்பில் இருந்து படிப்பதுதான் எங்களுக்கு பிடித்திருக்கிறது என்கின்றனர். ஆனால் இது லாக்டவுன் நேரம் என்பதால் something is better than nothing.

சரவணக்குமார்,

பெற்றோர், மேட்டுப்பாளையம் காரமடையில் உள்ள தனியார் பள்ளியில் எனது மகள் 8ம் வகுப்பும், மகன் 1ம் வகுப்பும் படிக்கிறார்கள். இருவருக்குமே ஆன்லைன் வகுப்புகள் இருக்கிறது. பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடத்தில் கருத்துக் கேட்கவில்லை. வகுப்பு எடுக்கிறோம் ஃபீஸ் கட்டுங்கள் என்பதே அவர்களின் நிலை. கூகுள் மீட் மூலம் ஆசிரியர்கள் பாடம் எடுக்கிறார்கள். காலையில் 10ல் இருந்து மதியம் 1 மணி வரை வகுப்பு இருக்கிறது. பாடத்தை ஆசிரியர் நடத்தும்போது குழந்தைகளின் பங்களிப்பு இல்லை. பல நேரத்தில் குழந்தைகள் வகுப்பைவிட்டு கிளம்புகிறார்கள். கேட்டால் ரொம்ப போர் அடிக்கிறது என்கிறார்கள். குழந்தைகள் வகுப்பில் உட்காருகிறார்களா? படிக்கிறார்களா? பயனுள்ளதாக இருக்கிறதா என்றெல்லாம் பள்ளி நிர்வாகம் கருத்துக் கேட்பதில்லை.

ஆன்லைன் கல்வி குழந்தைகளுக்கு அத்தனை உகந்ததாக இல்லை. குழந்தைகளை மிரட்டிதான் பெற்றோர்கள் உட்கார வைக்கிறோம். அதிலும் நெட் இணைப்பு சரியாக இல்லை என்றால் வகுப்பு தடைபடும். பல நேரங்களில் ஆடியோ தெளிவாக இருக்காது. பீஸ் பாக்கி எதுவும் இருந்தால் அதையும், புக் பீஸையும் கட்டிவிட்டு வகுப்பில் பங்கெடுக்க வேண்டும் என்றார்கள். புக் இருந்தால்தான் குழந்தைகள் ஆன்லைன் வகுப்பை கவனிக்க முடியும் என்றும் கூறினார்கள். இதில் வேன் பீஸ், ஸ்நாக்ஸ் பீஸ்களும் இருக்கிறது. ஒரு வீட்டில் இரண்டு மூன்று குழந்தைகள் இருந்தால் ஒவ்வொருவருக்கும் ஒரு லேப்டாப் அல்லது ஸ்மார்ட் ஃபோன் தேவைப்படுகிறது. பெற்றோர் வீட்டிலிருந்து வேலை செய்வதே பெரும் சவாலாக உள்ள நிலையில், அமைதியான சூழலும் தேவைப்படுகிறது. எந்நேரமும் குழந்தைகளுடனே இருக்கும் நிலையில், வெளியில் செல்ல வேண்டும் என்றால் வகுப்பு தடைபடுகிறது.

மேலும் என் மகன் ரொம்ப சின்ன குழந்தை. அவனை ஆன்லைன் வகுப்பில் உட்கார வைக்க எங்களால் முடியவில்லை. இதனால் வீடியோவாக பாடத்தை வாட்ஸ்ஆப் செய்கிறார்கள். அதிலும் வொர்க் ஷீட் கொடுத்து வேலை செய்ய வைத்து அனுப்பச் சொல்கிறார்கள். இதில் பெற்றோருக்குத்தான் சுமை. ஒரு சில பள்ளிகளில் குழந்தைகளை சீருடையோடு ஆன்லைன் வகுப்பில் அமரச் சொல்கிறார்கள்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!