முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக நிகழ்ச்சி நெல்லையில் படித்தவர்கள் உலகில் தலைசிறந்த டாக்டர்களாக உள்ளனர்-மருத்துவக் கல்லூரி டீன் ரவிச்சந்திரன் பெருமிதம்

நெல்லை : நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் இன்று  உலகின் பல நாடுகளில் தலை சிறந்த மருத்துவ வல்லுனர்களாக உள்ளனர் என  நெல்லையில் முதலாண்டு மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சியில் டீன் டாக்டர்  ரவிச்சந்திரன் கூறினார்.தேசிய மருத்துவ கவுன்சிலின் உத்தரவுப்படி, நடப்பு கல்வியாண்டில் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ்  முதலாமாண்டு மாணவர்களுக்கு  நேற்று முன்தினம் முதல் மாணவர் சேர்க்கை  நடந்தது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாண்டு  மருத்துவப் படிப்பு பயில மொத்தம் 250 இடங்கள் உள்ளன. இதுவரை சேர்ந்த 170   மருத்துவ மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் அறிமுக நிகழ்ச்சி நெல்லை அரசு  மருத்துவக் கல்லூரியில் நேற்று நடந்தது.

முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளை  சீனியர் மருத்துவ மாணவர்கள் மலர் கொடுத்து இனிப்பு வழங்கி  உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக நிகழ்ச்சி  நடந்தது. நிகழ்ச்சியில் கல்லூரி துணை முதல்வர்  டாக்டர் சாந்தாராம் வரவேற்றார். டீன் டாக்டர்  ரவிச்சந்திரன் தலைமை வகித்து கல்லூரியின்  சிறப்புகள், வசதிகள் மற்றும்  ஏற்கனவே இக்கல்லூரியில் படித்து முடித்த  மருத்துவர்களின் சாதனைகள்  குறித்து பேசியதாவது:

தமிழகத்தில்  சென்னைக்கு அடுத்தபடியாக பழமை வாய்ந்த மிகச்சிறந்த மருத்துவக்கல்லூரியாக  நெல்லை மருத்துவக்கல்லூரி செயல்படுகிறது. 57வது பேட்ஜாக இங்கு பயில வந்துள்ள  மாணவர்களாகிய உங்களுக்கு இக்கல்லூரியில் பயில வாய்ப்பு கிடைத்திருப்பது  பெருமைக்குரியது. ஏனென்றால் இங்கு பயில தேவையான சகல  விதமான வசதிகளும் உள்ளன. எம்பிபிஎஸ் மட்டுமின்றி உயர் மருத்துவக் கல்வி  பயிலவும், மருத்துவ ஆராய்ச்சிக்கான வசதிகளும் உள்ளன. பல்நோக்கு மருத்துவமனை,  அறுவை சிகிச்சை கூடங்கள், ஆய்வகங்கள், கணினி மய டிஜிட்டல் மருத்துவ நூலகம்,  அனுபவம் மிக்க பேராசிரியர்கள், தாராள தங்கும் விடுதி உள்ளிட்ட அனைத்து  வசதிகளும் உள்ளன.

மருத்துவக்கல்வி பள்ளிப்பருவம் போன்றது அல்ல.  உங்களுக்கு இனி ‘ஸ்பூன் பீடிங்க்’ கல்வி தேவை இருக்காது. கடும்  போட்டிகளுக்கு இடையே இடம் பிடித்து மருத்துவராகும் கனவில் சேர்ந்துள்ள  நீங்கள் கடுமையாக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  கடந்த 56 ஆண்டுகளில் இங்கு பயின்ற பலர் உலக அளவில் தலை சிறந்த மருத்துவ  வல்லுனர்களாக பணி செய்து இக்கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அதுபோல்  நீங்களும் இக்கல்லூரியில் சிறப்பாக பயின்று உலக அளவில் மிகச்சிறந்த  மருத்துவ மேதைகளாக வளரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியை மாணவர்களின் பெற்றோர் கண்டுகளிக்கும் வகையில் தனி  அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன், துறைத்தலைவர்கள்  அலெக்ஸ், அழகேசன், சுரேஷ்குமார், ஷீபா, ராமலெட்சுமி, ராமானுஜம்,  சுவாமிநாதன், மார்த்தாண்டம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவர்கள் துறை  சார்ந்த சிறப்புகளை விளக்கினர். மாணவர்கள், மருத்துவம் தொடர்பான உறுதி மொழி  ஏற்றனர். மருத்துவ கல்வி தொடர்பான குறும்படம்  ஒளிபரப்பு  செய்யப்பட்டது. மாணவர் பிரதிநிதி  நவீன்குமார் நன்றி   கூறினார்.

Related Stories: