×

உசிலம்பட்டி கதர் கிராம தொழில் வாரிய கிடங்கில் தீ விபத்து: ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கதர் கிராம தொழில் வாரிய கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்புடைய பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. உசிலம்பட்டி கீழப்புதூரில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்திற்கு சொந்தமான கிடங்கில் தூய்மை பணியாளர்களுக்கான கையுறை மற்றும் ஆடைகள் தயாரிப்பதற்கான பொருட்கள் இருந்தன. அவ்வப்போது பணியாளர்கள் குடோனுக்கு வந்து பொருட்களை சரி பார்த்து அதனை காதி கிராப்ட் விற்பனை மையங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். மற்ற சமயம் குடோன் பூட்டியே கிடக்கும். காவலாளிகளும் நியமிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனே உசிலம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் குடோன் பூட்டை உடைத்து பார்த்தபோது அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மளமளவென எரியத் தொடங்கியிருந்தன. குடோன் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தீயணைப்பு துறையினர், 3 மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கிடங்கில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புடைய நூல் பண்டல்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

திறந்த வெளியில் கிடந்த குப்பையில் பற்றிய தீ, கிடங்கில் பரவியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கதர் கிராம தொழில் வாரிய மேலாளர் கூறுகையில், குடோனில் விற்பனைக்காக பருத்தி நூல், தூய்மை பணியாளர்களுக்கான கையுறைகள், ஆடைகள், பஞ்சு மற்றும் விற்பனைப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இவை மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள விற்பனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் இன்று நடந்த தீவிபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகி விட்டன. இதன் மதிப்பு ரூ 20 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என தெரிவித்தார்.

Tags : Usilampatti Kadar Village Industries Board , Usilampatti, Kadar village industry, warehouse, fire, accident, Rs 20 lakh, goods, damage
× RELATED வட தமிழக மாவட்டங்களில் 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்