×

வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய பணம் பதுக்கல்!: எடப்பாடி பழனிசாமி நண்பர் இளங்கோவன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் ரெய்டு..!!

சேலம்: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நண்பரும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ம் தேதி நடைபெறுகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை சேலம் மாநகராட்சி, ஆத்தூர், நாகசிங்கபுரம், மேட்டூர், எடப்பாடி, தாரமங்கலம் என 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகளில் உள்ள 699 வார்டுகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. சேலம் நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வாக்காளர்களை கவரும் வகையில் அதிமுக ஏற்கனவே பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.

குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமாக சேலம் இருப்பதால் இந்த முறையும் அதிமுக அனைத்து வார்டுகளையும் கைப்பற்ற வேண்டும். சேலம் மாநகராட்சியில் மேயர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்று கடந்த 10,11,12,13 ஆகிய 4 நாட்கள் சேலத்தில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி நண்பரும், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த புத்திரகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோவன், அதிமுக-வில் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக இருக்கிறார்.

இவர், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவராகவும், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்து வருகிறார். அதிமுக  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமான, தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். தற்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பணம் பதுக்கி வைத்துள்ளதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடைபெற்று வருகிறது. சேலம் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள இளங்கோவன் வீட்டில் சோதனை நடைபெறுகிறது.

இளங்கோவன் வீட்டில் சேலம் மாவட்ட போலீஸ் மற்றும் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அவர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, 21.2 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி, ரூ.29.77 லட்சம் பணம், 10 சொகுசு கார்கள், 2 சொகுசு பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.


Tags : Edappadi Palanisamy ,Ilangovan , Edappadi Palanisamy Friend Ilangovan, House, Election Flying Corps
× RELATED மக்களை பிரிவுபடுத்தி பேசுவது பிரதமர்...