×

அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு 49 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையா? நாளை மறுதினம் தீர்ப்பு

அகமதாபாத்: கடந்த 2008ல் நடந்த அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட 49 பேரின் தண்டனை விவரம் நாளை மறுதினம் அறிவிக்கப்பட உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத் நகரில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு மணி நேரத்தில் 21 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 56 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் 77 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 13 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ஆர்.படேல், கடந்த 8ம் தேதி தீர்ப்பளித்தார். அதில், 49 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது. 28 பேர் விடுவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்த விசாரணை நடந்தது. இதில் இரு தரப்பு விசாரணைகளும் நேற்றுடன் முடிந்தன. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. நீதிபதி, நாளை மறுதினம் தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளார்.

Tags : Ahmedabad , Ahmedabad blast case: 49 convicts sentenced to death? Judgment the next day
× RELATED வாபஸ் பெற்ற காங். வேட்பாளர்