×

திருத்தணி அருகே அடுத்தடுத்த 3 கிராமங்களில் தொடர் கொள்ளை: எஸ்பி வருண்குமார் ஆய்வு

திருத்தணி: திருத்தணி அருகே அடுத்தடுத்த 3 கிராமங்களில் மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருத்தணி அடுத்த கொல்லாலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி இந்துமதி(50), நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு எதிரே உள்ள தனது தங்கையின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 60 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் உயரக 4 பட்டுப்புடவைகள், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

மேலும், இந்துமதியின் வீட்டின் அருகே அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்தனர். ஆனால் வீட்டில் எதுவும் இல்லாததால் பீரோவில் வைத்திருந்த துணிகளை கலைத்தும், சில பொருட்களை சேதப்படுத்தி விட்டும் தப்பிச்சென்றனர். தகவறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். மேலும் புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல், கனகம்மாசத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட என்.என்.கண்டிகை கிராமத்தில் மணிகண்டன்(40) என்பவரது செல்போன் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம். இதேபோல், சிவாடா கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை மர்ம நபர்கள் உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர். அடுத்தடுத்த 3 கிராமங்களில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். அடுத்தடுத்து 3 கிராமங்களிலும் மர்ம  நபர்கள் கைவரிசை காட்டியுள்ள இடங்களில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி  வருண்குமார் நேரில் ஆய்வு செய்தார். மேலும் போலீஸ் மோப்ப நாய் விக்கி  மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார்.  மோப்ப நாய் விக்கி, கொள்ளை நடந்த சம்பவத்தில் இருந்து சுமார் 2 கிலோ  மீட்டர் தூரம் உள்ள மத்தூர் கேட் வரை சென்றது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.

Tags : Thiruthani ,Varunkumar , Serial looting in 3 consecutive villages near Thiruthani: SP Varunkumar study
× RELATED திருத்தணி முருகன் கோயிலுக்கு...