வல்லூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

பொன்னேரி: வல்லூர் அனல் மின்நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும், தேசிய அனல் மின் கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக வல்லூர் அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நிலக்கரி கையாளுதல், சாம்பல் பிரிவு, மின் உற்பத்தி என பல்வேறு பிரிவுகளில் இங்கு சுமார் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையில், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 8ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று மாலை சென்னை தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்படுவதாக தொழிற்சங்கம் அறிவித்தது. இதனையடுத்து கடந்த 7 நாட்களாக மேற்கொண்ட வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு திரும்பிச் சென்றனர்.

Related Stories: