ஒரு லோன் வாங்குறதுக்கே விழி பிதுங்கும் நிலையில் 28 வங்கிகளை சூறையாடிய குஜராத் கப்பல் நிறுவனம்: ரூ.22,842 கோடி கடன் வாங்கி ஏப்பம்

புதுடெல்லி: குஜராத்தை சேர்ந்த ஏபிஜி ஷிப் யார்டு நிறுவனம் மற்றும் அதன் முன்னாள் தலைவர் ரிஷி கமலேஷ் அகர்வால் மற்றும் நிறுவன இயக்குநர்கள் சந்தானம் முத்துசாமி, அஸ்வினி குமார் உள்ளிட்டோர் மீது, 22,842 கோடி வங்கிக்கடன் மோசடி தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கப்பல் கட்டுமான நிறுவனம், ஏபிஜி ஷிப் யார்டு. 1985ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி துவக்கப்பட்ட இந்த நிறுவனத்தின் பதிவு அலுவலகம், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ளது.  கப்பல் கட்டுமானம் மற்றும் பழுது பார்த்தல் ஆகிய பணிகளில் இது ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம், கடந்த 16 ஆண்டுகளில் 165 கப்பல்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் 46 கப்பல்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில், எர்னஸ்ட் அண்ட் யங் என்ற ஆடிட்டிங் நிறுவனம் வெளியிட்ட தணிக்கை அறிக்கையில், ஏபிஜி ஷிப்யார்டு, வங்கிகளில் வாங்கிய கடன் தொகையை கடந்த 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை, வங்கிகளில் வாங்கிய சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தது. பாரத ஸ்டேட் வங்கி உட்பட 28 வங்கிகளில் மொத்தம் 22,842 கோடி கடன் வாங்கி இந்த நிறுவனம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி தலைமையில் 28 வங்கிகளும் கொடுத்த புகாரின் அடிப்படையில் , ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனம் மற்றும் இதன் முன்னாள் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான ரிஷி கமலேஷ் அகர்வால் உள்ளிட்டோர் மீது  சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

பாரத ஸ்டேட் வங்கி நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், ஏபிசி ஷிப்யார்டு நிறுவனத்துக்கு வழங்கிய கடன் தொகை, வசூலிக்க முடியாததால் கடந்த2013, நவம்பர் 30ம் தேதி வராக்கடனாக மாறியது. அதன்பிறகு கடன் மறு சீரமைப்பு முயற்சிகளும் பலன் அளிக்காததால், மீண்டும் கடந்த 2016 ஜூலையில் வராக்கடன் ஆனதாக முடிவு செய்யப்பட்டதாக கூறியிருந்தது. இருப்பினும், கடந்த 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டுக்கு இடையேதான், கடன் தொகையை வேறு பயன்பாட்டுக்கு மாற்றி மோசடிகள் அரங்கேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கடன் தொகையை வெளிநாடுகளில் உள்ள தனது துணை நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும், வேறு நிறுவனங்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.

இந்த கடன் மோசடி தொடர்பாக முதன் முதலாக கடந்த 2019, நவம்பரில் பாரத ஸ்டேட் வங்கி சிபிஐயிடம் புகார் செய்திருந்தது. பிறகு, முழுமையான மோசடி  விவரங்களுடன் சேர்த்து 2வது முறையாக 2020 டிசம்பரில் புகார் செய்தது. ஐசிஐசிஐ, பாரத ஸ்டேட் வங்கி உட்பட 28 வங்கிகளில் மொத்தம் ரூ.22,842 கோடி கடன் வாங்கி மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில் பாரத ஸ்டேட் வங்கியிடம் மோசடி செய்த கடன் தொகை மட்டும் ரூ.2,468.51 கோடி என, வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

இந்த வங்கி, ஐசிஐசிஐ வங்கியில் ரூ.7,089 கோடி, ஐடிபிஐ ரூ.3,634 கோடி, பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.2,925 கோடி, பாங்க் ஆப் பரோடாவில் ரூ.1,614 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.1,200 மேல்  கடன் வாங்கியுள்ளதாக சிபிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி ஆகியோர் செய்த கடன் மோசடியை விட, இதுவரை இல்லாத மிகப்பெரிய கடன் மோசடியாக ஏபிஜி ஷிப்யார்டு மோசடியும் கருதப்படுகிறது. சாதாரண மக்களும், நிறுவனங்களும் ஒரு வங்கியில் கடன் வாங்குவதற்கே ‘முழி பிதுங்கி’ நிற்கும் நிலையில், இந்த கப்பல் நிறுவனம் 28 வங்கிகளில் தொடர்ச்சியாக கடன் வாங்கி மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே, இந்த வழக்கில், ரிஷி கமலே் அகர்வால் உட்பட 9 பேர் தேடப்படும் நபர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ நேற்று தெரிவித்தது.

Related Stories: