மும்பை, பதான்கோட், புல்வாமா தாக்குதல் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை: ஐநா.வில் இந்தியா வேதனை

ஐநா.: ‘இந்தியாவில் தீவிரவாதிகள் நடத்திய மும்பை, பதான்கோட், புல்வாமா தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை,’ என ஐநா. சபையில் இந்தியா வேதனை தெரிித்துள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக தெற்கு மற்றும் தென்கிழக்கு உறுப்பு நாடுகளுக்கான கூட்டம், ஐநா.வில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், ஐநா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரக ஆலோசகர் ராஜேஷ் பரிஹர் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: இந்தியாவில் கடந்த 2008ல் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதல், 2016 பதான்கோட் தீவிரவாத தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தீவிரவாத தாக்குதல் ஆகியவற்றின் கொடூரங்களை உலகம்  கண்டுள்ளது. இந்த தாக்குதல்களை நடத்தியவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை அனைவரும் அறிவோம்.

மேலும், இத்தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர்களை உலக நாடுகள் பிடித்து தண்டிக்க வேண்டும். இந்த கொடூரமான தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட இந்திய மக்களுக்கு இன்னும் நீதி  கிடைக்கவில்லை. இந்த தாக்குதல்களை நடத்தியவர்கள், அதற்கு உதவியாளர்கள், நிதி வழங்குபவர்கள் தொடர்ந்து சுதந்திரமாக வெளியே சுற்றி வருகின்றனர். இன்னும் அரசின் ஆதரவையும், சகல வசதியும் அனுபவித்து வருகின்றனர். அவர்களை ‘பயங்கரவாதத்தால்  பாதிக்கப்பட்டவர்கள்’ என்று சாயம் பூசி சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்த  அனுமதிக்கக் கூடாது (மறைமுகமாக பாகிஸ்தானை குறிப்பிட்டு). பாகிஸ்தானை தளமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புகளில் இருந்து இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருகின்றன. அல்கொய்தாவுக்கும் இந்த 2 தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையேயான நெருங்கிய தொடர்புகளை, கடந்த வாரம் ஐநா பொதுச்செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடாதது கவலை அளிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: