×

பாகிஸ்தானில் மற்றொரு பயங்கரம் கிறிஸ்தவ வாலிபர் அடித்து கொலை: பாட்டு கேட்ட விவகாரம் மத மோதலாக மாறியது

லாகூர்: இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மையினர் மக்கள் தொகையில் இந்துக்கள் அதிகமாக உள்ளனர். அதற்கு அடுத்து கிறிஸ்தவர்கள் உள்ளனர். இந்நிலையில், மதவெறி காரணமாக இந்நாட்டில்
 சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகமாகி வருகிறது. இந்நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில்  கடந்த டிசம்பரில் குரான் வாசகங்கள் இடம் பெற்ற போஸ்டரை கிழித்த இலங்கையை சேர்ந்தவரை கும்பல் தாக்கி, உயிருடன் எரித்து கொன்றது. சில தினங்களுக்கு முன் குரானை கிழித்து எரித்த மனநிலை பாதித்தவரை மரத்தில் கட்டி, கல்லால் அடித்து கும்பல் கொன்றது.

இந்த பரபரப்பு அடங்கும் முன்பாக, இங்குள்ள லாகூர் தொழிற்சாலை பகுதியில் கிறிஸ்தவர் ஒருவரை கும்பல் அடித்து கொன்றது. இப்பகுதியை சேர்ந்த பர்வேஸ் மாஷி (25). கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் இஸ்லாமியரான சோனி மாலிக், சத்தமாக பாட்டு கேட்டதை தட்டிக் கேட்டதை தொடர்ந்து மோதல் வெடித்துள்ளது. இந்த பகை காரணமாக கடந்த ஞாயிறன்று, பர்வேசின் உறவினரான சோபல் மாஷி என்பவரை மாலிக் கும்பல் அடித்து நொறுக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பின்னர், மறுநாளும் இந்த மோதல் நீடித்தது. மாலிக் பெரிய கும்பலாக சென்று பர்வேஸ் மாஷியையும் தாக்கினார்.

இதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதைத் தொடர்ந்து, இந்த மோதல் இஸ்லாமியர் - கிறிஸ்தவர் மோதலாக மாறி, இருதரப்பும் கும்பலாக மோதிக் கொண்டனர். போலீசார் எடுத்த நடவடிக்கையால், இந்த மோதல் தடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடக்கும் இந்த கும்பல் தாக்குதல் படுகொலையால் பெரும் பதற்றம் நிலவுகிறது. பர்வேஸ் படுகொலை தொடர்பாக போலீசார் 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாலிக் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். பர்வேசுக்கு 7 சகோதரிகள். இந்த குடும்பத்துக்கு இவர்தான் ஒரே பிள்ளை.


Tags : Pakistan , Another horrific Christian youth beaten to death in Pakistan: The issue of listening to the song turned into a religious conflict
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...