×

தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் பள்ளிகளில் இன்று முதல் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் திறப்பு

சென்னை: அரசு அறிவிப்பின்படி, தமிழகத்தில் உள்ள 20 ஆயிரம் தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட மழலையர் வகுப்புகள் இன்று  முழு வீச்சில் திறக்கப்படுகின்றன. நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் மாதம், கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இந்த பாதிப்பில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு உடனடி சிகிச்சை பெற முடியாமல் இறப்புகள் அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து,  இந்தியாவிலும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் 2020 மார்ச் 25ம் தேதி  முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகளும் மூடப்பட்டன. தொற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க, பள்ளி கல்லூரிகளும் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன. தொடர்ந்து தொற்றின் பாதிப்பு நீடித்து வந்ததால், பள்ளி மாணவர்கள் வகுப்புக்கு வருவதை ரத்து செய்து, அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி தனியார் பள்ளிகளில் படிக்கும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. இருப்பினும், மழலையர்களுக்கான நர்சரி பள்ளிகள், விளையாட்டுப் பள்ளிகள், கிரீச்கள், அங்கன்வாடி, பால்வாடி குழந்தைளுக்கு வகுப்புகள் தொடங்கினால் அவர்களுக்கு தொற்று பாதிக்க வாய்ப்பு இருக்கும் என்பதால், அவர்களுக்கான  வகுப்புகளை  தொடங்கவில்லை.

இந்நிலையில் 2022 ஜனவரி மாதம் தொற்று குறையத் தொடங்கியதால், உயர் வகுப்புகளுக்காக மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இருப்பினும் இரண்டாம் கட்டமாக தொற்று பரவத் தொடங்கியதால் மீண்டும் அந்த வகுபுகள் மூடப்பட்டன. தற்போதைய சூழ்நிலையில் தொற்று மிகவும் குறைந்துள்ளதால் பள்ளிகள்  முழு வீச்சில் தொடங்கலாம் என்று சுகாதாரத் துறை தெரிவித்த ஆலோசனையின் பேரில் தமிழக அரசு, பொது ஊரடங்கின் பல்வேறு விதிகளை தளர்த்தியுள்ளது. அதில், மழலையர் பள்ளிகளையும்  திறக்கலாம் என்பதும் முக்கிய அறிவிப்பு.

 இதையடுத்து, தமிழகத்தில் இயங்கும் 10 ஆயிரம் நர்சரி, விளையாட்டுப் பள்ளி, கிரீச்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகள் ஆகியவற்றில் நடத்தப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இன்று  முதல் செயல்பட உள்ளன. அதற்காக தனியார் பள்ளிகளும், அரசு அங்கன்வாடி, பால்வாடி உள்ளிட்ட மழலையர்களுக்கான பள்ளிகள் மற்றும் மையங்களில் சுத்திகரிப்பு பணிகள், சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று பள்ளிக்கு வரும் மழலையர்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி வழங்கப்பட உள்ளது. மேலும் பள்ளிகளில் போதிய இடைவெளியுடன் மழலையர்கள் உட்கார வைக்கப்படுவார்கள்.

Tags : LGG ,UKG ,Tamil Nadu , The first LGG and UKG classes will be opened in 20,000 schools across Tamil Nadu from today
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...