×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் பீஸ்ட் பட ‘அரபிக் குத்து’ பாடல் சாதனை

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் யுடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் பீஸ்ட். இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இதில் விஜய் ஜோடியாக முதல்முறையாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சர்கார் படத்துக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் என்பதால், இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பீஸ்ட் படத்திலிருந்து ‘அரபிக் குத்து’ என்ற டூயட் பாடல் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்து பாடகி ஜொனிதா காந்தியுடன் இணைந்து பாடியிருக்கிறார். ‘ஹலமதி ஹபீபோ’ என தொடங்கும் இந்த பாடலில் விஜய், பூஜா ஹெக்டே ஆடிப் பாடுகின்றனர். அரேபிய இசையில் வித்தியாசமான குத்து பாடலாக இது அமைந்துள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாடல் வெளியானதும் டிவிட்டரில் ‘அரபிக் குத்து’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது. அதேபோல் இந்த பாடல் யுடியூப்பில் வைரலாகியுள்ளது.

பாடல் வெளியாகி 45 நிமிடத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்தது. பிப்ரவரி 13ம் தேதி மகேஷ்பாபு நடித்த சர்காரு வாரி பாட்டா தெலுங்கு படத்தில் இடம்பெற்ற ‘கலாவதி’ பாடல் வெளியானது. இந்த பாடல் வெளியாகி 24 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இது யுடியூப்பில் புதிய சாதனையாக அமைந்தது. இந்நிலையில் பிப்ரவரி 14ம்தேதி வெளியான பீஸ்ட் படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல், வெறும் 16 மணி நேரத்திலேயே 18 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சர்காரு வாரி பாட்டாவின் பாடல் சாதனையை முறியடித்தது. மேலும் சமீபத்தில் ஹிட்டான பல படங்களின் பாடல்களை ‘அரபிக் குத்து’ பாடல் ஓரம் கட்டியுள்ளது. இதன் மூலம் பீஸ்ட் படத்தின் பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. நேற்று இரவு 9.30 மணி நிலவரப்படி 26 மில்லியன் பார்வையாளர்களை இப்பாடல் கடந்துள்ளது. 2.3 மில்லியன் லைக்குகளையும் பெற்று சாதித்துள்ளது.

Tags : Vijay ,Sun Pictures , Beast movie 'Arabic punch' song record starring Vijay produced by Sun Pictures
× RELATED எல்லாமே கவிதை மாதிரி இருந்துச்சி - Vijay Antony Speech at Mazhai Pidikatha Manithan Teaser launch