×

இன்று தாக்குதல் நடக்கும் என கூறப்பட்ட நிலையில் உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள் திடீர் வாபஸ்: அதிபர் புடின் மனமாற்றமா?

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷ்ய படைகள் இன்று தாக்குதல் நடத்தும் என கூறப்பட்ட நிலையில், எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இந்நாட்டு படைகள் திடீரென முகாமுக்கு திரும்பி வருகின்றன. இதனால், உக்ரைன் போர் உலகப் போராக மாறுமோ என்ற அச்சத்தில் இருந்த உலக நாடுகள் நிம்மதி அடைந்துள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால், உக்ரைனை அச்சுறுத்தும் வகையில் அதன் எல்லையில் 1.30 லட்சம் வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்துள்ளது. இதற்கு அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உக்ரைனை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளன.

மேலும், இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக அமெரிக்க அதிபர் பைடனும், ரஷ்ய அதிபர் புடினும் தொலைபேசியில் ஒரு மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியது. இதனால், போர் பதற்றம் அதிகரித்தது. அமெரிக்க உளவுத்துறை தகவலின்படி, உக்ரைன் மீது ரஷ்யா இன்று படையெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அமெரிக்கா, கனடா, இத்தாலி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, பெல்ஜியம், நார்வே, நெதர்லாந்து, ஜெர்மனி, ஜப்பான், இஸ்ரேல், சவுதி அரேபியா உள்பட பல்வேறு நாடுகள், உக்ரைனில் வசிக்கும் தங்களுடைய குடிமக்களை வெளியேறும்படி அறிவுறுத்தி உள்ளன. அதேபோல், இந்தியாவும் நேற்று இங்குள்ள மக்களை நாடு திரும்பும்படி கேட்டுக் கொண்டது.

இது தொடர்பாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `உக்ரைனில் நிலவும் தற்போதைய நிச்சயமற்ற சூழலைக் கருத்தில் கொண்டு, இங்குள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். அத்தியாவசியத் தேவையின்றி இந்தியர்கள் யாரும் உக்ரைனுக்கு வர வேண்டாம். இந்தியர்கள் தங்களுடைய இருப்பிடம், நிலை குறித்து அவ்வபோது தூதரகத்துக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத திருப்பமாக, உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த படையின் ஒரு பகுதியை ரஷ்யா திடீரென திரும்ப பெறத் தொடங்கி உள்ளது. இவை அருகில் உள்ள ராணுவ தளங்களுக்கு திரும்பி வருகின்றன. அதே நேரம், பெலாரஸ் எல்லை, கருங்கடல் பகுதிகளில் உள்ள ரஷ்ய ராணுவம், கடற்படை போன்றவை போர் ஒத்திகைகளை தொடர்ந்து வருகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்யாவின் படைகள் முகாமுக்கு திரும்புவது, இந்த போரால் உலக போர் ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருந்த உலக நாடுகளுக்கு தற்காலிக நிம்மதி அளித்துள்ளது.

* ரஷ்யாவை கண்டிக்க சீனாவுக்கு நெருக்கடி
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன், ``உக்ரைன் விவகாரத்தில் சீனா, ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுகிறது என்று தோன்றுகிறது. உலக நாடுகள் அனைத்தும் இணைந்து உக்ரைனுக்கு எதிரான அச்சுறுத்தலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள சீனா, உக்ரைனில் நடப்பவைகளை பார்த்து கொண்டிருக்காமல், ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்,’’ எனக் கூறினார்.

* உக்ரைனில் சிறிய அளவிலான இந்தியர்களே வசித்து வந்தாலும், கடந்த 2020ம் ஆண்டு கணக்கின்படி ஏறக்குறைய 18,000 மாணவர்கள் அங்கு படித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

* திரும்புவது ஏன்? ரஷ்யா விளக்கம்
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை செய்தி தொடர்பாளார் இகோர் கோனசென்கோவ் கூறுகையில், ``உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த படையினர் தங்களது போர் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர். இதையடுத்து, தெற்கு, மேற்கு பகுதி மாவட்டங்களில் உள்ள வீரர்கள் சாலை மார்க்கமாக தங்களது முகாமிற்கு திரும்ப தொடங்கி உள்ளனர்,’’ என தெரிவித்தார். எத்தனை படைப்பிரிவினர் போர் பயிற்சியில் ஈடுபட்டனர், எவ்வளவு வீரர்கள் திரும்ப பெறப்பட்டுள்ளனர் என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் தெரியவில்லை.

Tags : Ukraine border , Russian troops withdraw from Ukraine today
× RELATED உக்ரைன் எல்லையில் மேற்கொண்டு...