×

திடீரென ஆளுங்கூட்டணிக்கு தாவிய 5 காங். எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்: மேகாலயா காங்கிரசின் பலம் பூஜ்யம்

ஷில்லாங்: மேகாலயாவில் ஆளும் கூட்டணிக்கு மீதமிருந்த 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தாவியதால், தற்போது அவர்களை கட்சித் தலைமை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதனால் மேகாலயாக காங்கிரசின் பலம் பூஜ்யமானது. மேகாலயாவில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், தனது பெரும்பான்மையை பெறத் தவறியது. இதனால் முன்னாள் மக்களவைத் தலைவர் பி.ஏ.சங்மாவின் மகன் கான்ராட் சங்மா தலைமையில் கூட்டணி அரசு பதவியேற்றது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் முகுல் சங்மா உட்பட காங்கிரஸ் கட்சியின் 12 எம்எல்ஏக்கள் கடந்த நவம்பரில் அக்கட்சியை விட்டு விலகி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதனால் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 5 ஆக சுருங்கியது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எஞ்சிய 5 எம்எல்ஏக்களும் கடந்த சில நாட்களுக்கு முன் அக்கட்சியை விட்டு விலகி, பாஜக இடம்பெற்றுள்ள ஆளும் மேகாலயா ஜனநாயக கூட்டணியில் (எம்டிஏ) கூட்டணியில் இணைந்தனர். இதனால் மேகாலயாவில் காங்கிரசின் பலம் பூஜ்யமாகிவிட்டது. இதுதொடர்பாக முதல்வர் கான்ராட் சங்மாவிடம், சம்பந்தப்பட்ட 5 எம்எல்ஏக்களும் அளித்துள்ள கடிதத்தில், ‘காங்கிரஸ் எம்எல்ஏக்களான நாங்கள், எம்டிஏ கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளோம். மக்களின் நலன் கருதியும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு கூட்டு முயற்சியை உறுதி செய்யவும் முதல்வர் மற்றும் எம்டிஏவை ஆதரிக்க விரும்புகிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் கட்சி தலைமைக்கு காங்கிரஸ் கட்சியின் மேகாலயா தலைவர் வின்சென்ட் எச்.பாலா பரிந்துரைத்தார். அவரது பரிந்துரையை ஏற்றுக்கொண்ட கட்சித் தலைமை மேற்கண்ட அவர்களை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட 5 எம்எல்ஏக்களும் ஆளும் கூட்டணியின் அங்கமாக இருப்பார்களா? அல்லது கூட்டணி கட்சியுடன் இணைவார்களா? என்பது குறித்து அடுத்த 10 நாட்களில் விளக்கம் அளிக்க ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக மேகாலயாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Meghalaya ,Congress , Suddenly, to the ruling coalition, 5 Cong. MLA, Suspended
× RELATED மேகாலயா முதல்வர் பிரசாரத்தில் ரூ.1 கோடி பறிமுதல்