×

இசை எல்லோருக்குமானது!

நன்றி குங்குமம் தோழி

‘‘இசை ஒரு பயங்கரம். அறிவு உள்ளவர்கள் மட்டும்தான் கத்துக்க முடியும். சில முட்டாள்களுக்கு அது வராது…” என்கிற பயத்தினை உருவாக்கி வைத்திருந்தனர், எனக்கு இசை கற்றுக் கொடுத்த குருக்கள். அதேபோல் யாராவது ஒரு மாணவன் கிடைத்துவிட்டால் அவரிடமிருந்து அதிக பணத்தையும் சுருட்டினர். அந்த குருக்களிடமிருந்து இசையை மட்டுமே கற்றுக் கொண்ட நான், அதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறேன்” என்கிறார் இசைக் கலைஞா் ஆர்த்தி பரம்ஜோதி.

‘‘அப்பா தமிழ், அம்மா பஞ்சாபி. பிறந்து வளர்ந்ததெல்லாம் டெல்லி. சின்ன வயதிலிருந்தே படிப்பை தாண்டி விளையாட்டு, இசை மீது அதீத ஆர்வம். அதனாலயே என்னை பையன் மாதிரியும், அண்ணாவை பொண்ணு மாதிரியும் வளர்த்தாங்க. பொதுவா டெல்லி வடக்கு பகுதியில், பெண்கள்  துணிச்சலா இருக்கனும், எல்லா விஷயங்களும் கத்துக்கணும்னு ஆம்பள மாதிரி வளர்ப்பாங்க. பெண்கள் மீது மரியாதை வரணும்னு பசங்களுக்கு வீட்டில் இருக்கும் எல்லா வேலைகளையும் சொல்லிக் கொடுப்பாங்க.

எங்க தெருவில் எல்லா மதம், மாநிலம் சார்ந்தவங்க இருந்தாலும் அதிகமாக பஞ்சாபி குடும்பங்கள் இருந்தன. அதனால் ஒரு குடும்பம் போல தான் இருந்தோம். பல மொழிகள் கற்றுக் கொள்ள இது ஒரு வாய்ப்பாகவும் இருந்தது. டெல்லியில் முதல் தமிழ் பிரிண்டர் அப்பாதான். அவர் ஆர்மியில் இருந்த போதும் பிரிண்டிங் செக்‌ஷன்லதான் இருந்தாங்க. அடுத்து இது பற்றி மேலும் படிக்கணும்னு ஜெர்மனியில் போய் கத்துக்கிட்டு வந்தாங்க. திகார் ஜெயில், அரசு வேலைகள், பத்திரிகை, போஸ்டர் என்று பல அரசு-தனியார் வேலைகள் செய்துட்டு இருந்தாங்க. சமீபத்தில்தான் பத்திரிகை துறையில் இருந்து ஓய்வு பெற்றாங்க. அப்பா ரொம்ப ஜாலி டைப். ஃபிரண்ட்லியாதான் பழகுவார். அதனாலேயே எங்களுக்குள் எதிர்மறையான சிந்தனை இருந்ததில்லை. அதேபோல் பெண் இப்படித்தான் இருக்கணும், ஆண் இப்படித்தான் இருக்கணும் என்ற கட்டுப்பாடுகளும் இல்லை. நான் ரொம்ப குறும்பு.

அண்ணன் எனக்கு அப்படியே நேரெதிர்.ரொம்ப சைலன்ட். நான் ரொம்ப குறும்பு செய்ததால் அப்பா என்னை அரசுப் பள்ளியில் படிக்க வைச்சார். அண்ணன் மட்டும் கான்வென்டில் படிச்சார். அரசுப் பள்ளியில் படிச்சதால படிப்பை தவிர மற்ற எல்லா கலை சார்ந்த விஷயங்களிலும் என்னால் கவனம் செலுத்த முடிந்தது.
எங்க தெருவில் இருக்கும் பெண்கள் எல்லாரும் இரவு உணவு தயார் செய்திட்டு, அனைவரும் இணைந்து குழந்தைகளை மட்டும் குருதுவார் கூட்டிக் கொண்டு போவதை வழக்கமாக கொண்டிருந்தாங்க. அங்கு நாங்க கோயிலில் சேவைகள் செய்வோம். அதாவது, கோயில் சுத்தம் செய்றது, கலை நிகழ்ச்சிகள் பண்றது… நல்ல சேவை செய்த குழந்தை ஒருவரை மாதம்தோறும் தேர்வு செய்து, பரிசு தருவாங்க. அது எங்களுக்கு ரொம்ப பெரிய கிஃப்ட் மாதிரி இருக்கும். போட்டி போட்டுக் கொண்டு சேவை செய்வோம்.

அங்க நான் அடிக்கடி போனதால, அம்மாவிடம் ஹார்மோனியம் மற்றும் கீர்த்தனை கத்துக்கணும்னு சொன்னேன். ‘அதுக்கு நீ முறையா இசை கத்துக்கணும்’னு சொல்லி ஹிந்துஸ்தானி கிளாசிக்கில் சேர்த்து விட்டாங்க. அங்க படிச்சிட்டு இருக்கும் போதே குருதுவார்ல பாடும் வாய்ப்பும் கிடைத்தது. வாய்ப்பு கிடைத்தாலும் பல விதமான அவமானங்களை சந்தித்தேன். என்னுடைய நிறம், மொழியை வைத்து நிறைய முறை நான் புறக்கணிக்கப்பட்டேன். அப்பெல்லாம் மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும். அந்த நேரம், என் நெருங்கிய நண்பர், குரு… எல்லாமுமான அம்மாதான் எனக்கு பெரிய ஆறுதலா இருந்தாங்க. பல தடைகளை தாண்டி, முதல் சபாவில் என்னுடைய கச்சேரி அரங்கேறியது.  என்னை கேலி செய்தவர்களுக்கு என் பாடல்களும், குரலும், திறமையும் பதில் சொன்னது. நிறைய பரிசுகள் வாங்கினேன். அதில் அம்மா ஒரு சேலஞ்ச் வச்சாங்க. ஒவ்வொரு வருஷமும் எக்ஸாம்ல நல்ல மார்க் வாங்கி பாஸ் பண்ணா, ஒரு இசைக் கருவி பரிசா தருவதாக சொன்னாங்க. இது படிப்போடு மற்ற துறைகளிலும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது” என்கிறார் ஆர்த்தி.

Prayag Sangeet Samiti of Allahabad University and Pracheen Kala Kendra Chandigarh-ல் ஹிந்துஸ்தான் கிளாசிக்கில் முதுகலை பட்டம், குர்பாணி இசையில் இரண்டு தங்கப் பதக்கங்கள், பரதநாட்டிய அரங்கேற்றம், ஆல் இந்தியா ரேடியோவில் பஞ்சாபி பகுதி, தூர்தர்ஷன் சேனலில் இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள்… என்று இயங்கி வந்த ஆர்த்தி, பள்ளி படிக்கும் போது தன்னை பாதித்த சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார்.  
‘‘நான் படித்த பள்ளியில் பிராமின் ஆதிக்கம் இருந்ததால், நிறைய சண்டை போட்டு இருக்கேன். அதனாலயே என்னை ‘You are a hitler’ன்னு திட்டுவாங்க. எட்டாவது படிக்கும் போது மாற்று மொழி ஒன்று தேர்வு செய்யனும். அதில் சமஸ்கிருதம் எடுத்தேன். அது ஆசிரியர்களுக்கு பிடிக்கவில்லை. என்னை முழுவதும் புறக்கணித்தார்கள். அந்த மொழியை கஷ்டப்பட்டு படித்து என் கோவத்தை தீர்த்தேன்” என்று கூறும் ஆர்த்தி, தான் சென்னை வந்த அனுபவத்தை பகிர்ந்தார்.     

‘‘பள்ளியில் படித்துக்கொண்டே இசையிலும் டிகிரி முடித்தேன். அதனால் படித்து முடித்ததும் வேலையும் கிடைத்தது. டீச்சிங் ரொம்ப பிடிக்கும். கிடைத்த வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு, இசை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் சென்னை குருதுவாரில் வேலை இருக்கிறது என்று, என்னை பரிந்துரைத்தார்கள். குடும்பத்தை விட்டு வெளியூர் வருவது அதுவே முதல் முறை. சென்னையில் ரொம்ப வெயிலாக இருக்குமென்று அப்பா எச்சரித்தார்.  இங்கு வந்ததும் குருதுவாருக்கு வராத நிறைய சீக்கியர்கள் வர ஆரம்பித்தார்கள். 12 மாணவர்கள் 150 ஆனாங்க. குழந்தைகளுக்கு இசையோடு நிறைய சேவா சார்ந்த விஷயங்களும் சொல்லிக் கொடுத்தேன். நான் சிறுவயதிலிருந்து கற்ற நல்ல விஷயங்களை அந்த குழந்தைகளுக்கும் கடத்தினேன். இப்படி இருக்கும் போது திருப்பத்தூரில் பார்த்திப ராஜா சார் மூலமாக ஒரு நிகழ்ச்சியில் குர்பாணி இசை கச்சேரி நடத்த வாய்ப்பு அமைந்தது. அங்கு வந்திருந்த ‘கனாக்காணும் காலம்’ வெற்றி அவருடைய ‘தியேட்டர் ஃ’ல் இருக்கும் நடிகர்களுக்கு குரல் பயிற்சி சொல்லி கொடுக்க கேட்டார்.  
 
இது புதிதாக இருந்தது. அதனோடு அவங்க நாடகங்களுக்கும் இசை அமைக்க சொன்னார். புரசை சம்மந்தம் ஐயாவோட கம்போஷிஷனை தியேட்டரிக்கலா நவீனப்படுத்தினேன். நாட்டுப்புற ஸ்டைல் மற்றும் அதன் சுவையும் மாறாமல், வார்த்தைகள் புரியும்படி கம்போஸ் செய்தேன். அது விவாதத்தையும் உருவாக்கியது. ஆதரவும் கிடைத்தது. இந்த நாடகத்தை பார்த்த தினா, பிரளயன் சாரை சந்திக்க ஏற்பாடு செய்தார். அப்போதுதான் இயக்குநர் ப.ரஞ்சித் தயாரித்த ‘முன்னவர்’ நாடகத்திற்கு இசையமைத்து பாடுவதற்கான வாய்ப்பு உருவானது. நட்பு வட்டமும் விரிவடைந்தது. இதனையடுத்து கருணா பிரசாத் அண்ணாவின் ‘கீசகவதம்’ நாடகத்திற்கும் இசையமைத்தேன்.  கற்றுக் கொடுப்பது ரொம்ப பிடிக்கும். கட்டணம் செலுத்த இயலாதவர்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கிறேன். நடிகர்களுக்கும் குரல் பயிற்சி கொடுத்து வருகிறேன். அர்ப்பணிப்போடு இருப்பவர்கள் என்னிடம் வந்தா அவர்களை ஆல்ரவுண்டர் ஆக்கிதான் அனுப்புவேன். இதுவரை தனியாக சென்னையில் போராடி வந்த என்னுடன் இல்வாழ்க்கையில் இணைந்தார் தீனா. தற்போது இருவரும் நம்பிக்கையோடு எங்கள் கலைப் பயணத்தை துவங்கி இருக்கிறோம்” என்றார் ஆர்த்தி.

தொகுப்பு: அன்னம் அரசு

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!