×

அயப்பாக்கத்தில் அதிகாலை பயங்கரம் வீடு புகுந்து மூதாட்டி படுகொலை: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

ஆவடி: அயப்பாக்கத்தில் இன்று அதிகாலை வீடுபுகுந்து மூதாட்டியை குத்திக்கொலை செய்திருப்பது அதிர்ச்சி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்பத்தூர்-அயப்பாக்கம் நெடுஞ்சாலை டி.ஜி.அண்ணாநகரை சேர்ந்தவர் சரத்சந்திரன் (70). இவர் தனியார் கம்பெனியில் பணியாற்றி ஓய்வுப்பெற்றவர். இவரின் மனைவி நிர்மலா (64). இவர்களது இரண்டு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டதால் தனித்தனியாக வசிக்கின்றனர். மகன் சந்தோஷ் (30), இவரின் மனைவி பிரேமலதா (25) ஆகியோர் பெற்றோரின் வீட்டை யொட்டி வசிக்கின்றனர்.

நேற்று சரத்சந்திரன் கும்மிடிப்பூண்டியில் வசித்துவரும் மகள் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் நிர்மலா நேற்றிரவு 11 மணிவரை மகன் சந்தோஷ் வீட்டில் பேசிவிட்டு பின்னர் தனது வீட்டுக்கு தூங்க சென்றுவிட்டார். வழக்கம்போல் இன்று காலை 7 மணி அளவில், சந்தோஷ் தாயை பார்க்க சென்றபோது வீட்டின் முன் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அவர் கதவை திறந்துகொண்டு உள்ளே சென்றபோது தலையில் பலத்த கத்திக்குத்து காயத்துடன் தாய் நிர்மலா ரத்தவெள்ளத்தில் இறந்துகிடப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டினர் வந்து பார்த்தனர். இதுபற்றி அறிந்ததும் கும்மிடிப்பூண்டி சென்றிருந்த சரத்சந்திரன், மகளுடன் விரைந்து வந்து கதறினார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி, எஸ்ஐக்கள் முபாரக், பாஸ்கர், ரமேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுபற்றிய புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நிர்மலா கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்படவில்லை.

வீட்டில் உள்ள பொருட்களையும் களவாடவில்லை. இதனால் நகை, பணத்துக்காக கொலை நடக்கவில்லை என்று தெரிகிறது. அப்படியானால் எதற்காக கொலை செய்யப்பட்டார், இதற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்று போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். தனிப்படை அமைத்து சம்பவம் நடந்துள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அயப்பாக்கத்தில் இன்று அதிகாலை மூதாட்டி கத்தியால் குத்திக்கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : In Ayappakkam, house infiltration, grandmother, murder
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பிறந்து ஒருமாதமே...