×

வேதாரண்யம், மயிலாடுதுறையில் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைக்கு சேதம்

*விவசாயிகள் வேதனை

வேதாரண்யம் : வேதாரண்யம், மயிலாடுதுறையில் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைக்கு சேதமானதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. பருவமழை பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது.

பருவம் தவறி கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் ஆதனூர், கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், வாய்மேடு, கரியாப்பட்டினம், செம்போடை, தலைஞாயிறு உம்பளச்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து சேதமானது.

மழைநீரில் சாய்ந்த நெற்பயிர்கள் வயலிலேயே முளைக்க துவங்கி விட்டது. இதில் ஒரு அடிக்கு மேல் வயல்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் இயந்திரங்களை கொண்டு அறுக்க முடியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இதே போல் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பொறையார், ஆயப்பாடி, திருக்களாச்சேரி, எடுத்துகட்டி சாத்தனூர், இலுப்பூர், சங்கரன்பந்தல், நெடுவாசல், திருவிளையாட்டம், ஈச்சங்குடி, தில்லையாடி, திருக்கடையூர், உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இதில் அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் 2 நாள் பெய்த மழையால் தண்ணீரில் சாய்ந்து சேதமானது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இந்த ஆண்டு சம்பா சாகுபடி இரண்டாவது முறையாக மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடும், 100சதவீத பயிர் காப்பீட்டு தொகையும் வழங்க வேண்டும் என வேதாரண்யம், மயிலாடுதுறை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Vetanam, Mailadu , Vedaranyam, agriculture,mayiladuthurai, heavy rain
× RELATED பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை