×

கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு 12 - 18 வயது சிறுவர்களுக்கு செலுத்தலாம் : மத்திய மருத்துவ தரக் கட்டுப்பாட்டு அமைப்பு

டெல்லி : கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு 12 - 18 வயது சிறுவர் சிறுமியர்களுக்கு செலுத்தலாம் என்று மத்திய மருத்துவ தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே, கோவிஷீல்டு, கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த ‘பயாலஜிக்கல்-இ’ நிறுவனம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து கோர்பேவாக்ஸ்’ என்ற தடுப்பூசியை உள்நாட்டு தொழில் நுட்பத்தில் கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியின் மாதிரிகளை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்ததில், அதில் பக்கவிளைவுகள் இல்லாத நல்ல முடிவு கிடைத்துள்ளது.

இந்நிலையில் 12 - 18 வயது சிறுவர்களுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு செலுத்தலாம் என்று மத்திய மருத்துவ தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை அளித்துள்ளது. கோர்பேவாக்ஸ் தடுப்பூசி தயாரிக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மருந்து நிறுவனம் இதற்கான ஆவணங்களை விரைவில் அரசுக்கு அளிக்க உள்ளது.  2 டோஸ்  தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் இதற்காக மத்திய அரசு 5 கோடி டோஸ்களை வாங்குவதற்கு ஆர்டர் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு தடுப்பூசி விலை 145 ரூபாய் மற்றும் வரிகள் என்று சொல்லப்படுகிறது. இதனிடையே இதுவரை ஒன்றரை கோடி சிறுவர் சிறுமியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக ஒன்றிய அமைச்சர் மான்சுக் மாண்டவியா  தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் 15-18 வயதுடைய சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



Tags : Federal Medical Quality Control System , கோர்பேவாக்ஸ் ,கொரோனா ,தடுப்பூசி,மருத்துவ தரக் கட்டுப்பாட்டு அமைப்பு
× RELATED கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர்...