×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், வாக்குப்பதிவு டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடல்

* பார்களை திறந்தால் கடும் நடவடிக்கை
* சென்னை கலெக்டர் எச்சரிக்கை

சென்னை: ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், வாக்குப்பதிவையொட்டி 4 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும். அன்றைய தினம் பார்களை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சென்னை கலெக்டர் விஜயா ராணி எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. தொடர்ந்து 22ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் தேர்தல், வாக்குப்பதிவு என்று 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பார்களை திறந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் விஜயா ராணி வெளியிட்ட அறிவிப்பு: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண  தேர்தலை முன்னிட்டு  வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக 17ம் தேதி காலை 10 மணி முதல், வாக்குபதிவு நாளான 19ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 22ம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் விற்பனைக் கடைகளும் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள்(எப்எல்1) எப்எல்2 உரிமம் முதல் எப்எல் 11 வரை(எப்எல்6 தவிர)உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. இந்த நேரத்தில் மாநிலத்தில் எந்தவொரு மதுபானத்தையும் விற்பனை செய்யவோ அல்லது வெளியில் கொண்டு செல்லவோ கூடாது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பினை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tasmag , Urban local elections, voting Tasmac stores 4 days closure
× RELATED பொது விடுமுறை நாட்களில்...