பெரணமல்லூர் பேரூராட்சியில் பரிதாப நிலையில் பாஜ,பாமக

பெரணமல்லூர்: பெரணமல்லூர் பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களிடையே வாக்கு கேட்க அறிமுகமான தலைவர்கள் யாருமின்றி பரிதாப நிலையில் பாஜவும், பாமகவினரும் திணறி வருகின்றனர்.தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரதான கட்சிகள் போட்டி போட்டு வாக்கு சேகரித்து வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சியில்  உள்ள 12 வார்டுகளில் 10 இடங்களில் திமுகவும், இரண்டு இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி அனைத்து இடங்களிலும் போட்டியிடுகிறது. அதிமுக 10 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது. மேலும் தேமுதிக மற்றும் பாஜவுக்கு தலா ஒரு இடத்திற்கு மறைமுகமாக உடன்பாடு செய்துள்ளது. குறிப்பாக தேசிய கட்சியான பாஜ 12 வார்டுகளில் வேட்பாளர்கள் கிடைக்காமல் வெறும் 4 இடங்களில் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அதிலும் ஒரு இடத்தில் அதிமுகவுடன் ரகசிய உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.‌

மேலும் தமிழகத்தில் அடுத்த முதல்வர் வேட்பாளர் அன்புமணி என முழங்கிவரும் பாமக 11 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த 11 இடத்திற்கும் உரிய வேட்பாளர்கள் கிடைக்காமல் குறிப்பிட்ட சில வார்டுகளில் இருந்தே ஆட்களை தேர்ந்தெடுத்து அவர்களை நிறுத்தியுள்ளனர். பிரதான திமுக, அதிமுக கட்சிகள் இரண்டும் போட்டி போட்டு நாள்தோறும் மக்களிடையே நன்கு அறிமுகமாகியுள்ள தலைவர்களை வைத்து பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் பாஜ மற்றும் பாமக வேட்பாளர்கள் இதுவரை தங்கள் பிரசாரத்தை ஆரம்பிக்காமல் தனியே சென்று மக்களிடையே வாக்கு சேகரிக்கின்றனர்.குறிப்பாக பொதுமக்களுக்கு நன்கு அறிமுகமான தலைவர்கள் இவர்களிடத்தில் இல்லாததால் வாக்கு சேகரிக்க சிரமப்பட்டு திணறி வருகின்றனர்.

Related Stories: