தமிழக முதல்வருடன் ஆலோசனை கூட்டாட்சி கட்டமைப்பை ஒன்றிணைந்து காப்போம்: மம்தா பானர்ஜி உறுதி

கொல்கத்தா: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ‘நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை ஒன்றிணைந்து காப்போம்’ என உறுதி கூறி உள்ளார். பாஜ ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களின் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

இதுதொடர்பாக மம்தா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டின் நலன் கருதியே திரிணாமுல் காங்கிரஸ் உபி.யில் போட்டியிட முடிவு செய்தது. ஆனால், அகிலேஷ் யாதவ் எந்த தொகுதியிலும் பலவீனமடைந்து விடக் கூடாது என்பதால் தான், தேர்தலில் போட்டியிடாமல் ஆதரவு அளிக்கிறது. மத சார்பற்றவர்களாக தங்களைக் கூறிக்கொள்பவர்கள், மக்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேண்டும். வெறுப்பு, வன்முறைகளின் தளையில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினேன். நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை பாதுகாக்க முயற்சிக்கிறோம். காங்கிரசுடன் கூட்டணி வைத்து கொள்ள எந்தவொரு பிராந்திய கட்சிகளும் முன்வரவில்லை. நான் ஒன்றும் செய்ய முடியாது. காங்கிரஸ் அவர்கள் வழியில் செல்லட்டும். திரிணாமுல் தனது வழியில் செல்லும்.

இவ்வாறு அவர் பேட்டியில் கூறினார்.

* உள்ளாட்சி தேர்தலில் வெற்றி

மேற்கு வங்கத்தில் கடந்த 12ம் தேதி நடந்த உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 4 மாநகராட்சிகளை கைப்பற்றியது. பிதான்நகரில் மொத்தமுள்ள 41 இடங்களில் 24, சிலிகுரியில் 10, சந்தாநகரில் 32 இடங்களில் 12, அசன்சோலில் மொத்தமுள்ள 106ல் 28 இடங்களை திரிணாமுல் கைப்பற்றி இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பளித்த மக்களுக்கு முதல்வர் மம்தா நன்றி தெரிவித்தார்.

Related Stories: