×

புல்வாமா தாக்குதல் 3ம் ஆண்டு நினைவு தினம் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி

புதுடெல்லி: புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் துணிச்சலும், தியாகமும் ஒவ்வொருவருக்கும் உந்துசக்தியாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் பேருந்தில் முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, வீரர்கள் இருக்கும்  பேருந்துகள் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோத செய்து பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடி தரும் வகையில் பிப்ரவரி 26ம் தேதி பாகிஸ்தானில் எல்லைக்குள் நுழைந்த இந்திய விமானப்படை விமானங்கள் தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தன.

புல்வாமா தாக்குதலின் 3ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘‘கடந்த 2019ம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த அனைத்து வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்கள் ஆற்றிய சிறந்த சேவையை நினைவு கூர்கிறேன். அவர்களது துணிச்சல் மற்றும் உயர்ந்த தியாகமும் ஒவ்வொரு இந்தியரையும் வலுவான மற்றும் வளமான நாட்டை நோக்கி உழைக்க தூண்டுகின்றது’’ என அஞ்சலி செலுத்தி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘‘புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிர்தியாகம் செய்த வீரர்களை நாம் ஒருபோதும் மறக்க முடியாது. அவர்களின் தியாகம்  மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது. அதற்கு பதில் அளிக்கப்படுவதை நாம் உறுதி செய்வோம். ஜெய் ஹிந்த்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Pulwama attack , Tribute to the martyrs of the 3rd anniversary of the Pulwama attack
× RELATED காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்குப்...