வடுவூர், கரைவெட்டி சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்தன

மன்னார்குடி: வடுவூர் மற்றும் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் குவிந்தன. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 316 ஏக்கர் பரப்பளவில் வடுவூர் ஏரி அமைந்துள்ளது. தமிழக வனத்துறை சார்பில் 1999ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த ஏரியில் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. வடுவூர் ஏரியை சுற்றி வளமான ஈர நிலங்கள் அதிகளவில் உள்ளதால் பறவைகள் வந்து செல்கிறது. பறவைகளுக்கு தேவையான பல்வேறு உணவு வகைகளை இந்த ஏரி பூர்த்தி செய்கிறது. இந்த சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா போன்ற மேலை நாடுகள் மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இனப்பெருக்கத்துக்காக 38 வகையான 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வரும். பின்னர் இங்கு தங்கி முட்டையிட்டு குஞ்சு பொறித்து ஏப்ரல் மாதம் முதல் தங்களின் நாடுகளுக்கு பறந்து செல்கிறது.

இந்தநிலையில் வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் இந்தாண்டுக்கான 2ம் கட்ட உள்நாட்டு பறவைகள் கணக்கெடுப்பு பணி கடந்த 2 நாட்களாக நடந்தது. இந்த பணியை மாவட்ட வன அலுவலர் அறிவொளி துவக்கி வைத்தார். கணக்கெடுப்பு முடிவில் இந்தாண்டு 55 வகையான நீர் பறவைகள், 64 வகையான நில பறவைகள் என மொத்தம் 119 வகைகளை சேர்ந்த 27,000 பறவைகள் வந்துள்ளது தெரியவந்தது. கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு புதுவரவாக செண்டு வாத்து மற்றும் கரண்டிவாயன் கொக்குகள் அதிகளவில் வந்துள்ளது. குறிப்பாக கருப்பு தலையுடன் கூடிய அரியவகை அரிவாள் மூக்கன் அதிகளவில் வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதேபோல் அரியலூர் மாவட்டம் கரைவெட்டியில் உள்ள பறவைகள் சரணாலயத்துக்கு வெளிநாடு மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் வந்து செல்கிறது. இந்த சரணாலயத்தில் வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடந்தது. தமிழ் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை முன்னாள் தலைவர் டாக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில் தன்னார்வலர்கள், கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். நவீன கேமரா, பைனாகுலர் உள்ளிட்ட அதிநவீன தொலைநோக்கு கருவிகளை கொண்டு ஒவ்வொரு பறவைகளின் வகை, அதன் தாய் நாடு, அதன் நிறம், இனப்பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் குறித்து கணக்கெடுத்து பதிவு செய்தனர்.

இதுகுறித்து டாக்டர் சிவசுப்பிரமணியன் கூறுகையில், கடந்த ஆண்டைவிட இந்தாண்டு பறவைகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது. குறிப்பாக லடாக், தெற்காசிய பகுதியில் இருந்து கூழைக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கான், மிளிரும் அரிவாள் மூக்கான், சாம்பல் நிற பறவை உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டு, உள்நாட்டு பறவைகள் வந்துள்ளன. சரணாலயத்துக்கு பறவைகளின் வருகை, அதன் தங்கும் காலம், இனப்பெருக்கம் குறித்து வனத்துறையிடம் அறிக்கை அளிப்போம். அதன் அடிப்படையில் சரணாலயத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: