தேர்தல் பிரசாரத்தில் எம்ஜிஆர் பாடல்களை கூறி இபிஎஸ் ஓபிஎஸ்சை கலாய்த்த லியோனி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது ஒரு மேடையில் முன்னாள் முதல்வர் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஆகியோர் வாக்கு சேகரித்தனர். அப்போது எடப்பாடி வருவதற்கு ‘ஆசைக்கும், பேருக்கும், பதவிக்கும் ஊரார் கால் பிடிப்பார்’ என்ற பாடலை போட்டனர். அது அவருக்காக போடப்பட்ட ஆடியோ என்று கூட தெரியாமல் ரசித்தவர்தான் எடப்பாடி.

ஓபிஎஸ் மேடை ஏறி வரும்போது, அவருக்காக ஒரு பாடல் பாடியது. ‘குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் திருட்டு உலகமடா’ என அவருக்காக ஒரு பாடல் போட்டார்கள்.

அதேபோன்று முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு ஒரு பாடல் போட்டார்கள். ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் போட்டு காண்பித்தார்கள். நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோதுதான் அதற்கான தேர்வு தமிழகத்தில் எழுதப்பட்டது என்பது தெரியாமல் முன்னாள் முதல்வர் பேசிக்கொண்டிருக்கிறார். இப்போது இருக்கக்கூடிய முதல்வர் எம்எல்ஏவாக, மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் இருந்து தற்போது முதலமைச்சராக இருக்கிறார். ஆனால் நீங்கள் சேருக்கு அடியில் மலைப்பாம்பை போல் நெளிந்து சசிகலாவின் காலில் விழுந்து முதல்வரானது எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: