ஓசூர் வனக்கோட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது

ஓசூர் : ஓசூர் வனக்கோட்டத்தில் நேற்று நடந்த முதல்கட்ட பறவைகள் கணக்கெடுப்பில் 50க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும், நடப்பாண்டில் வனத்துறையின் மூலம் 3 கட்டங்களாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஓசூர் வனக்கோட்டத்தில் காப்புக் காடுகளுக்கு வெளியில் உள்ள ஈர நிலப்பகுதிகளான ராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி, கே.ஆர்.பி அணை, கெலவரப்பள்ளி அணை, தளி ஏரி உள்ளிட்ட 18 நீர்நிலைகளில் நேற்று காலை 7 மணி முதல் 10 மணி வரை பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இதில் சுமார் 40க்கும் அதிகமான வன அலுவலர்கள், வனப்பணியாளர்கள் மற்றும் 60 தன்னார்வலர்கள் கலந்துகொண்டு, பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இக்கணக்கெடுப்பு பணியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர்களும் பங்கேற்றனர்.

 இவர்களை ஒருங்கிணைத்து சம்பந்தப்பட்ட நீர்நிலைகளுக்குச் சென்று கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டு வழிநடத்தப்பட்டது. ஒவ்வொரு நீர்நிலையிலும் கணக்கெடுக்கும் குழுவில் வன பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் பறவைகள் பற்றி முன் அனுபவம் உள்ள நிபுணர்கள் கலந்துகொண்டு பல்வேறு வகையான பறவை இனங்களை கண்டறிந்து பதிவு செய்தனர்.

இக்கணக்கெடுப்பு பணியின்போது, தொலைநோக்கு கருவி, கேமரா உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்தி, பிளாக் விங்டு, கைட் வைட், நேப்டு உட்பெக்கர், இந்தியன் கிரே ஹார்ன்பில், சாண்ட் வைப்பர், பர்ப்பில் ஹெரான், வைட் த்ரோடெட், கிங்பிஷர் மற்றும் மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பறவை இனங்களை அடையாளம் கண்டு உரிய படிவத்தில் குறிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணியில் டிவிஎஸ் தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள நீர்நிலையில் மஞ்சள் மூக்கு நாரை பறவை காணப்படுகிறது. இவ்வலசை செல்லும் பறவையானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இங்கு வலசை வந்து, பிப்ரவரி மாதத்தில் முட்டையிட்டு குஞ்சுகள் பொறித்து பராமரித்த பிறகு வலசை செல்லத் துவங்கும்.

டிவிஎஸ் வளாகத்திலுள்ள ஏரியில் மரங்கள் மற்றும் புதர் செடிகள் அதிக அளவில் காணப்படுவதாலும், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையாலும், இப்பறவை இனங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையில் காணப்படுவதால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக டிவிஎஸ் வளாகத்திற்கு இப்பறவைகள் வலசை வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. கென்னத் ஆண்டர்சன் நேச்சர் சொசைட்டி மற்றும் ஓசூர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவியுடன் வன கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ், கௌரவ வன உயிரின காப்பாளர் சஞ்சீவ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இத்தகவலை ஓசூர் வனகோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தெரிவித்துள்ளார்.

Related Stories: