துவரங்குறிச்சி அருகே விவசாயத்திற்கு பாதிப்பு வெடி மருந்து கிடங்கை அகற்றகோரி போராட்டம்-அய்யாக்கண்ணு எச்சரிக்கை

துவரங்குறிச்சி : திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த விடத்திலாம்பட்டி அருகே விவசாய நிலங்களுக்கு இடையே கடந்த 1985ம் ஆண்டு வெடி மருந்து கிடங்கு அமைத்ததாக கூறப்படுகிறது. கடந்த 16 ஆண்டுகளாக வறட்சியாக இருந்த பகுதியானதால் அப்பகுதியில் விவசாயம் பெருமளவில் நடைபெறவில்லை. இந்நிலையில்

கடந்த மாதங்களில் பெய்த பெரும் மழையால் நீர்நிலை நிரம்பி விவசாயத்திற்கு உதவியாக உள்ளது. தற்போது அந்த பகுதியில் சுமார் 30 ஏக்கர் விளைநிலங்களில் உழவு பணிகள் தொடங்கியுள்ளது.

அதற்கான மின் இணைப்புகள் மின் கம்பங்கள் அமைத்து பெறப்பட்டு வரும் நிலையில், வெடி மருந்து கிடங்கு உரிமையாளர், வெடி மருந்து கிடங்கு இருக்கும் பகுதியில் மின் பாதைகள் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, விவசாயிகளுடன் அப்பகுதியில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு, லாபகரமான விலையில்லாமல் ஏற்கனவே விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வெடி மருந்து கிடங்கும் வைத்திருப்பவர் அருகில் உள்ள 30 ஏக்கர் விளைநிலங்களில் யாரும் சாகுபடி செய்யக்கூடாது என கூறுவது சட்டவிரோதமானது, விவசாய நிலங்களுக்கு அருகில் வெடி பொருட்கள் கிடங்கு வைக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கவுள்ளோம், இல்லையேல் போராட உள்ளோம் எனக் கூறினார்.

Related Stories: