×

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் மார்க்ரம், மார்கோ, ரொமாரியோ: ஷான் அபாட்டையும் அள்ளியது

பெங்களூரு: ஐபிஎல் டி20 தொடர் மெகா ஏலத்தின் 2வது நாளான நேற்று கடும் போட்டிக்கிடையே வெளிநாட்டு வீரர்கள் எய்டன் மார்க்ரம், மார்கோ ஜான்சென், ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகிய வெளிநாட்டு வீரர்களை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வாங்கியது. ஐபிஎல் 15வது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் இஷான் கிஷன் அதிகபட்சமாக ரூ.15.25 கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தொடரில் புதிதாக இணைந்துள்ள குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகளுடன் ஏற்கனவே உள்ள 8 அணிகளும் தங்களுக்கான வீரர்கள் தேர்வில் முனைப்புடன் ஈடுபட்டன.

முதல் நாள் ஏலத்தின் முடிவில், இந்த 10 அணிகளின் சார்பில் மொத்தம் 74 வீரர்கள் வாங்கப்பட்டிருந்தனர். குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்த ஹியூ எட்மீட்ஸ் முழுமையாக குணமடையாததால், 2ம் நாளான நேற்றும் சாரு ஷர்மாவே ஏலத்தை தொடர்ந்து நடத்தினார். எதிர்வரும் சீசன்களுக்கு வலுவான அணியை கட்டமைக்கும் வியூகத்துடன் ஏலத்தில் பங்கேற்ற சன்ரைசர்ஸ் நிர்வாகக் குழுவினர், கடும் போட்டிக்கிடையே வெளிநாட்டு வீரர்கள் எய்டன் மார்க்ரம் (27 வயது, தென் ஆப்ரிக்கா), ரொமாரியோ ஷெப்பர்ட் (27 வயது, வெஸ்ட் இண்டீஸ்), மார்கோ ஜான்சென் (21 வயது, தென் ஆப்ரிக்கா), ஷான் அபாட் (29 வயது, ஆஸ்திரேலியா) ஆகியோரை ஒப்பந்தம் செய்தனர்.

தொடக்க வீரரான மார்க்ரம் அடிப்படை விலை ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், சன்ரைசர்ஸ் அவரை ரூ.2.6 கோடிக்கு வாங்கியது. ஆல் ரவுண்டர்கள் மார்கோ ஜான்சென் (அடிப்படை விலை ரூ.50 லட்சம்) ரூ.4.2 கோடிக்கும், ரொமாரியோ (அடிப்படை விலை 75 லட்சம்) ரூ.7.75 கோடிக்கும், ஷான் அபாட் (அடிப்படை விலை 75 லட்சம்) ரூ.2.4 கோடிக்கும் வாங்கப்பட்டனர். கடைசி கட்டத்தில் கிளென் பிலிப்ஸ் (நியூசி, ரூ.2 கோடி), பஸல்லா பரூக்கி (ஆப்கான், ரூ.66 லட்சம்),  இந்தியாவை சேர்ந்த ரவிகுமார் சமர்த், ஷஷாங்க் சிங், சவுரவ் துபே ஆகியோரை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கே சன்ரைசர்ஸ் வாங்கியது. மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில், சன்ரைசர்ஸ் அணியில் இளம் வீரர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக, இந்த அணியின் வேகப் பந்துவீச்சு மிக வலுவாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* காஸ்ட்லியான வெளிநாட்டு வீரர் லிவிங்ஸ்டன்
ஐபிஎல் 15வது சீசன் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமை இங்கிலாந்து ஆல் ரவுண்டர் லயம் லிவிங்ஸ்டனுக்கு (28 வயது) கிடைத்துள்ளது. கடும் போட்டிக்கிடையே இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.11.5 கோடிக்கு வாங்கியது.

* சிங்கப்பூர் வீரருக்கு ரூ.8.25 கோடி
சிங்கப்பூரை சேர்ந்த வீரர் டிமோதி ஹேஸ் டேவிட் (25 வயது). ஆல் ரவுண்டரான இவரை ஏலத்தில் எடுக்க பல அணிகள் ஆர்வம் காட்டியதால், அடிப்படை விலையாக வெறும் ரூ.40 லட்சம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.8.25 கோடி கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடுவதுடன், ஐபிஎல் தொடரில் ஏற்கனவே ஆர்சிபி அணியிலும் இவர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. வலது கை சுழற்பந்துவீச்சு மற்றும் அதிரடி பேட்டிங்கில் டிமோதி டேவிட் அசத்துவார் என மும்பை அணி நம்புகிறது.

* சச்சின் மகன் அர்ஜுனுக்கு ரூ.30 லட்சம்
வேகப் பந்துவீச்சாளரும் அதிரடி பேட்ஸ்மேனுமான அர்ஜுன் டெண்டுல்கரின் அடிப்படை விலை ரூ.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவரை வாங்க அணிகளிடையே அதிக ஆர்வம் இல்லாத நிலையில், அர்ஜுனை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.30 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.

* ஆடாத ஆர்ச்சருக்கு ரூ.8 கோடி!
இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், முழங்கை காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்து வருகிறார். மீண்டும் எப்போது களமிறங்கத் தயாராவார் என்பது உறுதியாகாத நிலையிலும், ஆர்ச்சரை ஏலம் எடுப்பதில் நேற்று கடும் போட்டி இருந்தது. இவரது அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தங்கள் அணியில் இணைத்துக்கொள்ளும் முனைப்புடன் ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலத்தை தொடங்கியது. மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் அணிகளும் எப்படியாவது இவரை வாங்கிவிட வேண்டும் என வரிந்துகட்ட, தொகை உயர்ந்து கொண்டே போனது. விறுவிறுப்பான ஏலத்தில், மிக உறுதியாக இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி ஆர்ச்சரை ரூ.8 கோடிக்கு வாங்கியது. இந்த சீசனில் களமிறங்காவிட்டாலும், அடுத்த 2 ஆண்டுகளுக்கு இவர் சிறப்பாக பங்களிப்பார் என்ற எதிர்பார்ப்புடன் மும்பை நிர்வாகம் இவரை ஒப்பந்தம் செய்துள்ளது.

* யு19 நட்சத்திரங்கள்
ஐசிசி யு19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் அடிப்படை விலை ரூ.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரூ.50 லட்சத்துக்கு வாங்கியது. ஆல் ரவுண்டராக அசத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்த ராஜ் அங்கத் பாவா (அடிப்படை விலை ரூ.20 லட்சம்), பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். வேகப் பந்துவீச்சாளர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை (அடிப்படை விலை ரூ.30 லட்சம்) ரூ.1.5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது.

Tags : Sunrisers Hyderabad ,Markram ,Marco ,Romario ,Shawn Abbott , Markram, Marco, Romario join Sunrisers Hyderabad: Shaun Abbott
× RELATED நான் ரெடி தான்… கம்மின்ஸ் உற்சாகம்