×

பள்ளிக்கு வரும் குழந்தைகள் பெயரில் தெருக்கள்

நன்றி குங்குமம் தோழி

மும்பையில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு கல்வியைக் கொண்டு சேர்க்க, ஒரு தொண்டு அமைப்பு புதிய முயற்சியைக் கொண்டு வந்துள்ளது. மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர அரசாங்கம் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி ஏழை மாணவர்களை ஊக்குவிப்பது வழக்கம். இங்கு நம் தமிழகத்தில், காலை மதியம் சத்துணவு போன்ற நலத்திட்டங்களால், கல்வி கற்ற மாணவர்களும் அதனால் பயனுற்ற குடும்பங்களும் ஏராளம்.

இதே போல மும்பையில் தற்போது இரண்டு பெண்களின் முயற்சியால், மாணவர்கள் ஆர்வத்துடன் கல்வி பயின்று வருகிறார்கள். ரஜனி, பீனா என்ற இரண்டு பெண்களும், ஏழை மக்களுக்கு கல்வியை அவர்களது வீடு தேடி எடுத்து செல்லும் “Doorstep School”என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.  இவர்கள் குறிப்பாக வீடில்லாமல் வாழும் மக்களின் குழந்தைகளுக்கு, கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு என பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய சமூகத்தினரின் குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களை அரசுப் பள்ளிகளில் இணைக்கின்றனர். பின் தொடர்ந்து கண்காணித்து வந்து கல்வியைத் தொடர அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்துகொடுக்கின்றனர்.

இந்தியாவில் ஆறிலிருந்து பதினான்கு வயதுக் குழந்தைகளுக்குக் கல்வி கட்டாய உரிமையாக இருந்தாலும், இன்றும் பல ஆயிரம் குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிராமப்புறத்தில்தான் இந்த நிலைமை என்று கூறிவிடமுடியாது. நகர்ப்புறங்களில் வாழும் பலருக்கும் கூட இதே நிலைதான். இதை உணர்ந்து நகர்ப்புறங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக மும்பையிலும் பூனாவிலும் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.    மும்பையில் பெற்றோர்கள் துப்புரவு பணி, கட்டுமான பணி என்று சென்றுவிட குழந்தைகள் பெரும்பாலும் தனியாகத்தான் இருக்கின்றனர். அவர்கள் தங்களது தம்பி, தங்கைகளை கவனித்துக்கொண்டும், பெரியவர்களின் கட்டுப்பாடு இல்லாமல் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் இருப்பார்கள்.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு சிலர் அக்குழந்தைகளைத் தவறான பாதையில் கொண்டு செல்லும் நிகழ்வுகளும் அதிகம் நடைபெறும். இதனால் குழந்தைகளுக்கு கல்வியுடன் பாதுகாப்பான சூழ்நிலையையும் உருவாக்கித் தரவேண்டும் என்று ரஜனியும் பீனாவும் முடிவு செய்தனர்.   
குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்க இவர்கள் எடுத்திருக்கும் புது முயற்சியில், சவால்களான சூழ்நிலைகளிலும் பள்ளிக்கு வரும் குழந்தைகளும், கல்வியில் சிறந்து விளங்கும் குழந்தைகளின் பெயர்களையும் மும்பையில் இருக்கும் சிறிய தெருக்களுக்கு வைக்கின்றனர். நகராட்சியின் ஒத்துழைப்
புடன் இந்த திட்டம் குழந்தைகளையும் பெற்றோர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.  
 
சவாலான சூழ்நிலையிலும் நன்றாகப் பயிலும் மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களது பெயர்களை வீதிகளுக்கு வைப்பதன் மூலம், அவர்கள் தொடர்ந்து பயில ஊக்கமளிப்பதுடன், அவர்களைப் போன்ற பிற மாணவர்களும் கல்வியைத் தொடர நல்ல உந்துதலாக இருக்கிறது. இப்படி சில தெரு பெயர்ப்பலகையில் இடம்பிடித்தவர்கள் ஆசிரியராக, விளையாட்டு வீரர்களாக, பட்டதாரிகளாக வாழ்க்கையில் உயர்ந்துள்ளனர். இவர்கள் வெற்றியே அடுத்து வரும் மாணவர்களுக்கு ஊக்கமாக அமைந்துள்ளது. இந்த டோர்ஸ்டெப் பள்ளி மூலம் 6-14 வயதுக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. பள்ளிக்கு வர இயலாத குழந்தைகளுக்காக பேருந்துகளில் அவர்கள் வீதிக்கே சென்று பாடம் எடுக்கின்றனர்.

பேருந்தையே வகுப்பறையாக மாற்றியமைத்து, வகுப்பிற்குத் தேவையான பொருட்களுடன் கணினி, டிவி, டிவிடி பிளேயர், ஆடியோ-வீடியோ பாடங்கள் வரை ஸ்மார்ட் பள்ளியாக இந்த பேருந்துகள் மாணவர்களை தேடி தினம் பயணிக்கிறது.  கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களுக்கும், வகுப்பறைகள் கட்ட முடியாத தொலைக்கோடி இடங்களுக்கும் செல்கின்றன. ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று இடங்களுக்கு சென்று அங்கு சுமார் இரண்டு மணி நேரம் பாடம் எடுக்கின்றனர். இதே போல, மாலை நேரங்களில் பல புத்தகங்களுடன் புறப்பட்டு, மாணவர்கள் பேருந்தில் அமர்ந்து புத்தகங்கள் பயிலும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : Streets ,school ,
× RELATED தீபாவளி பண்டிகை இன்று கொண்டாட்டம்: கடை வீதிகளில் அலைமோதிய மக்கள்