×

திருப்போரூர், திருமால்பூர் கோயில்களில் தேரோட்ட விழா கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்தனர்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் மாசி பிரமோற்சவ விழா கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 10 மணியளவில் அலங்கரிக்கப் பட்ட தேரில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு மாடவீதிகளிலும் பக்தர்களுக்கு மோர், ரஸ்னா, தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாதம் போன்ற அன்னதானம் வழங்கப்பட்டது.

வழியெங்கும் பக்தர்கள் தேங்காய் உடைத்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றி முருகப்பெருமானை வழிபட்டனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், செங்கல்பட்டு போலீஸ் எஸ்.பி. அரவிந்தன், மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் லில்லி ஆகியோர் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்து ரத்தினவேலு, கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் முருகன் ஆகியோர் செய்திருந்தனர். பிற்பகல் 3 மணியளவில் தேர் நிலையை வந்தடைந்தது.

 காஞ்சிபுரம் : தொண்டைநாட்டு  தேவாரத் திருத்தலங்களில் 11 வது தலமாக சிறப்புபெற்றது திருமால்பூர்  மணிகண்டீஸ்வரர் கோயில் ஆகும். இத்தலத்தின் மாசிமக பிரமோற்சவம் கடந்த  பிப்.7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து  ஸ்ரீ அஞ்சனாட்சி அம்பாள் சமேத மணிகண்டீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் காலை, மாலை  இருவேளைகளிலும் சிம்மம், சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதவாகனம், மயில்வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், அதிகார நந்தி, ரிஷப வாகனம், கைலாய  வாகனம், அறுபத்து மூவர், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

தொடர்ந்து ஏழாம் நாளான பிப்.13 ஆம் தேதி காலை சிறப்பு  அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார். அதில் திருமால்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) லட்சுமணன், உதவி ஆணையர்  விஜயா, கோயில் செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) சிவகுமார், ஆய்வாளர் அமுதா, அறங்காவலர் குழு தலைவர் குமரவேல், உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Tags : Thiruporur ,Tirumalpur , Thiruporur, Tirumalpur temples, the festival ceremony riot: Thousands pulled the rope
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் டாஸ்மாக் இடமாற்றம் செய்ய கோரிக்கை