×

தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி கடந்த 1996-2021ம் ஆண்டு வரை தமிழகத்துக்கு 100.43 டிஎம்சி கிருஷ்ணா நீர் வந்தது: கண்டலேறு அணையில் இருந்து முழு நீரை பெற அரசு மாற்று திட்டம்

சென்னை: கடந்த 1996-2021ம் ஆண்டு வரை தமிழகத்துக்கு இதுவரை 100.43 டிஎம்சி கிருஷ்ணா நீர் வந்துள்ள. மேலும், கண்டலேறு அணையில் இருந்து முழு நீரை பெற தமிழக அரசு மாற்று திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று நீர்வளத்துறை உயர் அதிகாரி ஓருவர் தெரிவித்தார். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு தெலுங்கு கங்கா திட்டப்படி கடந்த 1983ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12 டிஎம்சி நீர் தமிழகத்துக்கு தர வேண்டும்.

குறிப்பாக, ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டிஎம்சி நீர் தர வேண்டும். இந்த திட்டத்தின் படி கடந்த 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெறப்பட்டன. இந்த நீர் பங்கீட்டின் அடிப்படையில் ஏற்படும் செலவினத்தை இரண்டு மாநில அரசுகளும் ஏற்க முடிவு செய்யப்பட்டன. இந்த நீர் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்க கிருஷ்ணா நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இந்த குழு 6 மாதங்களுக்கு ஒரு முறை கூடி, ஒப்பந்தப்படி பங்கீடு கிடைக்கிறதா என்பது குறித்து கண்காணிக்கிறது.

இந்த நிலையில் கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி முழுமையாக இதுவரை கிடைத்ததில்லை. ஆனால், தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்வதில் இந்த நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2019-20ம் ஆண்டில் 8.05 டிஎம்சியும், 2020-21ம் ஆண்டில் 8.2 டிஎம்சி நீர் தரப்பட்டுள்ளது. 2021-2022ம் ஆண்டில் 4.47 டிஎம்சி தரப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 1996-97ம் ஆண்டு முதல் 2021-22ம் ஆண்டு வரை 100.43 டிஎம்சி நீர் தமிழக எல்லையில் பெறப்பட்டுள்ளது.

ஆனால், ஆந்திர அரசு கூடுதலாக தண்ணீர் திறந்து விட்ட போதிலும் அந்த நீர் முழுமையாக கிடைக்கவில்லை. எனவே, தான் முழுமையாக நீரை பெறும் வகையில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு பைப் லைன் வழியாக தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. சுமார் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் 300 கி.மீ நீளத்துக்கு பைப் லைன் மூலம் வருகிறது. இதற்கான திட்ட அறிக்கை அரசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று
பூண்டி ஏரியில், இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரிக்கும் திருப்பி அனுப்பபடுகிறது. இந்த பகுதிகளில் தண்ணீர் முழுமையாக சேராத நிலையில் அதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Ganga ,TMC ,Krishna ,Tamil Nadu ,Kandaleru dam , 100.43 TMC of Krishna water came to Tamil Nadu from 1996-2021 as per Telugu Ganga project agreement: Government alternative scheme to get full water from Kandaleru dam
× RELATED ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாய் ரூ.24 கோடியில் சீரமைப்பு