×

கங்கை, பிரம்மபுத்ரா நதிப்படுகைகளில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்: புதிய ஏரிகளால் பேரழிவு அபாயம்

புதுடெல்லி: கங்கை, பிரம்மபுத்ரா நதி படுகைகளில் உள்ள இமயமலை பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதாக ஒன்றிய அரசு கவலை தெரிவித்துள்ளது. இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவது பற்றி நாடாளுமன்றத்தில் சமீபத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒன்றிய புவி அறிவியல் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் வருமாறு: இந்துகுஷ் இமயமலை பனிப்பாறைகளின் சராசரி உருகும் விகிதம் ஆண்டுக்கு 14.9-15.1 மீட்டராகவும், சிந்து நதி பகுதிகளில் ஆண்டுக்கு 12.7-13.2 மீட்டராகவும், கங்கை நதி பகுதியில் ஆண்டுக்கு 15.5-14.4 மீட்டராகவும், பிரம்மபுத்ரா நதிப் படுகைகளில் ஆண்டுக்கு 20.2-19.7 மீட்டராகவும் உள்ளது. இருப்பினும், காரகோரம் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகும் விகிதம் குறைவாக இருப்பதால், அங்கு அவை அதிக பாதிப்பின்றி நிலையாக உள்ளன.

கங்கை, பிரம்மபுத்ரா நதிப் படுகைகளில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகிறது. இமயமலை பகுதிகளில் ஏற்படும் இந்த பனிப்பாறை மாற்றங்களை நாட்டின் பல்வேறு ஆய்வு அமைப்புகள் தொடர்ந்த கண்காணித்து வருகின்றன. பனிப்பாறை உருகுவதால் ஏற்படும் நீரோட்ட மாற்றங்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. பனிப்பாறை வேகமாக உருகுவது, இமயமலை நதிகளின் நீர் ஆதாரங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றால் புதிய ஏரிகளின் எண்ணிக்கையும், பரப்பளவும் அதிகமாகும் அபாயம் நிலவுகிறது. இவற்றில் உடைப்பு ஏற்பட்டு  திடீர் பெருவெள்ளம் ஏற்படக் கூடும். இதனால், விவசாய நிலங்கள், நீர்மின் திட்டங்களுக்கு பெரியளவில் சேதங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* ஜம்மு காஷ்மீர், லடாக், இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் அரியானா, ராஜஸ்தான் மாநிலங்களின் சில பகுதிகள் சிந்து நதிப்படுகையில் உள்ளன.
* உத்தரகாண்ட், டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தின் பெரும் பகுதிகள் கங்கைப் படுகையில் உள்ளன.
* சிக்கிம், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகலாந்து மாநிலங்கள், பிரம்மபுத்ரா நதிபடுகையில் உள்ளன.

Tags : Ganges ,Brahmaputra , Rapidly melting glaciers in the Ganges and Brahmaputra riverbeds: New lakes risk disaster
× RELATED சித்திரை மாத சிறப்புகள்