×

4 மாநிலங்களில் என்ஐஏ சோதனை நக்சல்கள் நிதியுதவி ஆதாரங்கள் சிக்கின

திருமலை: ஆந்திரா, ஒடிசா, பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் ஒரே நேரத்தில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் நக்சல்களுக்கு நிதியுதவி செய்தவர்கள் பற்றிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன. ஆந்திரா, ஒடிசா, பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் நக்சல்களின் செயல்பாடுகள் அதிகளவில் உள்ளன. இதை ஒடுக்குவதற்காக ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையி்ல், நக்சல் இயக்கங்களுக்கு நிதியுதவி அளிப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கையை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) எடுத்து வருகிறது.

இந்நிலையில், ஆந்திரா, ஒடிசா, பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆந்திர மாநிலம், நெல்லூர்  மாவட்டத்தில் சிறுவர் பூங்கா அருகே உள்ள ரஞ்சி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பிரபல ஒப்பந்ததாரரான பெஞ்சல நாயுடு வீட்டிலும், நெல்லூரில் உள்ள அனில் யாதவ் என்பவர் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது,  நக்சல்களுக்கு ஆயுதங்கள் வாங்கவும், புதியவர்களை சேர்ப்பதற்கும் அனில் யாதவ் நிதி திரட்டியதற்கான ஆதாரங்கள் சிக்கின. இந்த சோதனையில் 3 துப்பாக்கிகள், டிஜிட்டல் கருவிகள், நக்சல் இலக்கியங்கள், 4 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

* லாலுவை கொல்லும் சதியிலும் உடந்தை
பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் வீட்டில் கடந்த 2008ம் ஆண்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நக்சலைட் சகதேவ் யாதவுக்கு அனில் யாதவ் நிதியுதவி செய்ததற்கான ஆதாரங்களும் சோதனையில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


Tags : NIA ,Naxals , NIA raids Naxals in 4 states
× RELATED சட்டீஸ்கரில் 10 நக்சல்கள் சுட்டுக் கொலை