×

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி பிரமோற்சவம்; தேரோட்ட விழா கோலாகலம்.!

திருப்போரூர்: திருப்போரூர்  கந்தசுவாமி கோயிலில்  மாசி பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. அரோகரா முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை  வடம்பிடித்து இழுத்து சென்றனர். திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த 7ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டு அரோகரா முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். நான்கு மாடவீதிகளிலும் பக்தர்களுக்கு மோர், ரஸ்னா, தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாதம் போன்ற அன்னதானம் வழங்கப்பட்டது.

வழியெங்கும் பக்தர்கள் தேங்காய் உடைத்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி முருகப்பெருமானை வழிபட்டனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், செங்கல்பட்டு போலீஸ் எஸ்பி அரவிந்தன், மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் லில்லி ஆகியோர் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் முத்து ரத்தினவேலு, கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் முருகன் ஆகியோர் செய்திருந்தனர். பிற்பகல் 3 மணியளவில் தேர் நிலையை வந்தடைந்தது. திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, நான்கு மாடவீதிகளிலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் டேங்கர் லாரியில் தண்ணீர் பீய்ச்சியடித்து சுத்தம் செய்யப்பட்டது.


Tags : Pramorsavam ,Thiruporur Kandaswamy Temple ,Therota festival , Mass Pramorsavam at Thiruporur Kandaswamy Temple; Therota festival commotion.!
× RELATED சிதம்பரம் கோயில்: பிரமோற்சவம் நடத்தக்கோரி வழக்கு