பேராவூரணி பகுதியில் பரவலாக மழை: வயல்களில் விற்பனைக்கு வைத்திருந்த நெல்மணிகள் நனைந்து சேதம்

பேராவூரணி: பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது. அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கியதாலும், நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்கு வைத்திருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகினர். பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் திடீரென கன மழை பெய்தது.

இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து மழையில் மூழ்கின. தொடர்ந்து மழை பெய்தால் விவசாயிகள் பலத்த இழப்பை சந்திக்கும் நிலை உருவாகும். விவசாயிகள் வயல்களில் தண்ணீரை வடிய வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பேராவூரணி ஒன்றியம் குறிச்சி, பாலத்தளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விற்பனைக்காக விவசாயிகள் நெல் மூட்டைகளைக் கொண்டுவந்து குவித்து வைத்திருந்தனர்.

திடீர் மழை காரணமாக மழையில் நெல்மணிகள் நனைந்ததால் விவசாயிகள் தார்பாய் கொண்டு நெல்லை மூடி பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்தாலோ, நெல் கொள்முதல் தாமதமாகும் பட்சத்தில் விவசாயிகள் பலத்த இழப்பை சந்திக்க நேரிடும். எனவே தாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீடு கிடைக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை பாதுகாக்க நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லாததால், அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் வயல்களில் கொட்டி வைத்திருந்த நிலையில் திடீர் மழை பெய்ததால் கொட்டிவைத்துள்ள நெல்மணிகளை சுற்றி வயலில் மழைநீர் தேங்கியுள்ளதால், அதை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நெல் சாகுபடி அதிக பரபரப்பளவு கொண்ட பகுதிகளில் கூடுதலாக நடமாடும் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பள்ளத்தூர் பகுதி விவசாயிகள் கூத்தலிங்கம், முருகையன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: